
அமெரிக்காவின் புதிய அதிபராகப் பொறுப்பேற்றதில் இருந்து டொனால்ட் டிரம்ப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்படி, அமெரிக்காவில் இரு பாலினம், சட்டவிரோத குடியேற்றத்தில் புதிய கட்டுப்பாடுகள், பிறப்புரிமை அடிப்படையில் குடியுரிமை ரத்து போன்ற அறிவிப்புகளால் உலக நாடுகளே அதிர்ந்து போயின. இந்த சூழ்நிலையில், சீனா, இந்தியா போன்ற வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு பரஸ்பர வரி விதிக்கப்படுவதாக கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.
அதில் அறிவிப்பில், இந்தியப் பொருட்களுக்கு 27% இறக்குமதி பரஸ்பர வரியும், சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 34% பரஸ்பர வரியையும் விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 20% வரியும், ஜப்பான் பொருட்களுக்கு 22% இறக்குமதி வரியும் விதிக்கப்படுவதாகத் பாகிஸ்தான் 29%, வியட்நாம் 46%, வங்கதேசம் 37% என இப்படியாக ஒவ்வொரு நாட்டில் இருந்தும் அமெரிக்காவிற்கு இறக்குமதியாகும் பொருட்களுக்கு வரி விதிப்பை அமெரிக்கா அறிவித்தது.
அமெரிக்காவின் இந்த கூடுதல் வரி விதிப்பு நடவடிக்கையால், பல்வேறு நாடுகளும் அமெரிக்காவுக்கு கண்டனம் தெரிவித்தன. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சீனாவும், அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 34% வரி விதிக்கப்படுவதாக அறிவித்தது. இதற்கிடையில் வரிவிதிப்புகள் அறிவிக்கப்பட்டதில் இருந்து உலக அளவில் பங்குச் சந்தைகள் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகின்றன. இதன் மூலம், உலகில் இருக்கும் தொழிலதிபர்கள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

இந்த சூழலில், அமெரிக்கப் பொருட்கள் மீது சீனா விதித்த 34% வரியை 24 மணி நேரத்திற்குள் திரும்பப் பெறவில்லை இல்லையென்றால், மறுநாள் சீனா மீது 104% கூடுதல் வரிகளை அமெரிக்கா விதிக்கும் என அமெரிக்கா அதிபர் டிரம்ப் நேற்று எச்சரிக்கை கொடுத்திருந்தார். ஆனால், அமெரிக்கா மீதான 34% வரிவிதிப்பை 24 மணி நேர கெடுக் முடிந்தும் சீனா திரும்பப் பெறவில்லை. சீனாவிற்கு எதிரான வரிகளை அதிகரிப்பதாக அமெரிக்கா அச்சுறுத்துவது தவறுக்கு மேல் தவறு என்றும், இது அமெரிக்காவின் பழிவாங்கும் தன்மையை காட்டுகிறது என்றும், அமெரிக்கா தனது வழியில் செல்ல வலியுறுத்தினால்,சீனா இறுதிவரை போராடும் என்றும் சீனா தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், அமெரிக்கா எச்சரிக்கை விட்டதன்படி சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 104% வரி விதிக்கப்படுவதாக அமெரிக்கா இன்று (09-04-25) காலை அறிவித்துள்ளது. இந்த வரிவிதிப்பு இன்று முதல் அமலுக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான இந்த வரி விதிப்பு நடவடிக்கையால், உலக அளவில் வர்த்தக போருக்கு வழி வகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.