முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக பாமக தலைமை நிலையம் தெரிவித்துள்ளது.
பாமக தலைமை நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், எடப்பாடி பழனிச்சாமியை ராமதாஸ் இன்று மாலை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.
தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக தமிழக அரசு அறிவித்துள்ள பல்வேறு நடவடிக்கைகளுக்கு ராமதாஸ் வரவேற்பு தெரிவித்தார். அதேநேரத்தில், கரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பதற்கு பதிலாக 144 தடை உத்தரவு பிறப்பித்திருப்பது போதுமானதல்ல என்று எடப்பாடி பழனிச்சாமியிடம் ராமதாஸ் கூறினார். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் அது மக்களிடையே கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க எந்தெந்த வழிகளில் எல்லாம் உதவியாக இருக்கும் என்பதையும் விரிவாக விளக்கிக் கூறினார்.
ராமதாஸ் தெரிவித்த கருத்துகளை எடப்பாடி பழனிசாமி மிகுந்த அக்கறையுடன் கேட்டுக் கொண்டார். அவற்றை ஆய்வு செய்து முடிவெடுப்பதாகவும் உறுதியளித்தார். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.