
பிரதமர் மோடியினுடைய பிரச்சார உத்திகளுக்கு தமிழக மக்கள் என்றைக்கும் இரையாக மாட்டார்கள் என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கு. செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு, இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுக்கு வரிவிதிப்பை அதிகரித்திருக்கிறார். இந்திய பொருட்களுக்கு 26 சதவிகித வரி விதிக்கப்பட்டது. அதேபோல, சீனாவுக்கும் வரி விதிக்கப்பட்டதை எதிர்த்து அமெரிக்க பொருட்கள் மீது 34 சதவிகித வரியை சீனா விதித்திருக்கிறது. கனடா போன்ற வேறு சில நாடுகளும் பதிலடி கொடுக்க திட்டமிட்டுள்ளன. இதனால் உலக அளவில் வர்த்தக போர் வெடிக்கும் அபாயகரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் கடுமையாக பாதிக்கப்படுகிற நிலையில், நேற்று இந்திய பங்கு சந்தைகளில் ரூபாய் 19 லட்சம் கோடி அளவில் ஒரே நாளில் முதல் 5 நிமிடங்களிலேயே இத்தகைய பேரிழப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால், சிறு முதலீட்டாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், இதுகுறித்து தலைவர் ராகுல்காந்தி வெளியிட்ட எக்ஸ் தள பதிவில் இந்தியப் பொருளாதார சந்தை வீழ்ச்சியடைகிற நேரத்தில் இந்திய பிரதமர் எங்கே இருக்கிறார் என்று கேள்வியை எழுப்பியிருக்கிறார். இந்நிலையில், மோடியின் நெருங்கிய நண்பரான டொனால்ட் டிரம்பின் சர்வாதிகார அறிவிப்புகளினால் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் விழி பிதுங்கி நிற்கின்றன. பிரதமர் மோடி இதுகுறித்து கவலைப்படுவதாக தெரியவில்லை.
கடந்த 11 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் இந்தியா வளர்ச்சி அடைந்ததோ இல்லையோ, பா.ஜ.க. தனது கட்சியின் நிதி ஆதாரத்தை பெருக்கிக் கொண்டிருக்கிறது. கார்ப்பரேட் மற்றும் தொழிலதிபர்களுக்கு காட்டப்படுகிற சலுகைகளினால் 2023-24 ஆம் நிதியாண்டில் மட்டும் ரூபாய் 2243 கோடி நன்கொடைகளை பா.ஜ.க. குவித்துக் கொண்டிருக்கிறது. முந்தைய ஆண்டுகளில் பெற்ற நன்கொடைகளை விட 199 சதவிகிதம் இது அதிகமாகும். மொத்த நன்கொடைகளில் பா.ஜ.க.வுக்கு 88 சதவிகிதம் கிடைத்திருக்கிறது. இந்த நன்கொடைகளில் 90 சதவிகிதம் கார்ப்பரேட் அல்லது தொழில் நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது.
ஆக, பா.ஜ.க. கார்ப்பரேட் நிறுவனங்களான அம்பானி, அதானி உள்ளிட்ட தொழிலதிபர்களுக்கு சலுகைகளை; வழங்குவதால் பா.ஜ.க.வுக்கு லஞ்சப் பணமாக கொடுக்க வேண்டியதை இத்தகைய நன்கொடைகள் மூலம் வழங்குகிறார்கள். இது ஊழல் இல்லை என்றால் எது ஊழல் ? இதனால் மற்ற தேசிய கட்சிகள் பெற்ற மொத்த நன்கொடையை விட பா.ஜ.க.வுக்கு 9 மடங்கு அதிகமாக கொடுக்கப்படுகிறது. இது நன்கொடையா? லஞ்சப் பணமா? என்பதை பிரதமர் மோடி தான் விளக்க வேண்டும். நரேந்திர மோடி 2014, 2019 பொதுத் தேர்தல்களில் இந்தியாவின் பொருளாதாரத்தை 2024 ஆம் ஆண்டிற்குள் 5 டிரில்லியன் டாலராக உயர்த்திக் காட்டுவேன் என்று சூளுரை மேற்கொண்டார். ஆனால், 2016 ஆம் ஆண்டில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் 2020 இல் கொரோனா பாதிப்பினால் இந்திய பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பை பற்றி பேசுகிற பிரதமர் மோடி இந்தியர்களின் தனிநபர் வருமானத்தைப் பற்றி பேசுவதில்லை.

சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வின்படி, இந்தியாவில் தனிநபர் வருமானம் உலக நாடுகளில் 138வது இடத்தில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்தியா தானாகவே வளர்ச்சியடைகிறதே தவிர, தனிநபர் வருமானம் உயரவில்லை. இந்தியாவின் வளர்ச்சி என்பது கார்ப்பரேட்டுகளின் வளர்ச்சியே தவிர, ஏழை - எளிய மக்களின் வளர்ச்சி அல்ல. மோடியின் வளர்ச்சி அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி அல்ல. அதேபோல, மோடி ஆட்சியில் வறுமை ஒழிந்ததா என்ற கேள்விக்கு பதில் கூறுகிற வகையில் உலக வறுமைக் குறியீட்டின்படி மொத்தமுள்ள 127 நாடுகளில் 105வது இடத்தில் இருக்கிற பரிதாப நிலையை பார்த்தால், இந்தியாவில் பசி, பட்டிணியால் மக்கள் எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை உணர முடியும்.
விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும், விவசாயக் கடன் தள்ளுபடிக்காகவும் ஆண்டுக் கணக்கில் தலைநகர் தில்லியில் விவசாயிகள் போராடினார்கள். ஆனால் அவர்களை சந்திக்க பிரதமர் மோடி தயாராக இல்லை. அதேநேரத்தில், பா.ஜ.க. அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 25 பில்லியன் டாலர் ஊக்கத் தொகை வழங்கியிருக்கிறது. மேலும், ரூபாய் 16 லட்சம் கோடி கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. வங்கிகளில் வாராக் கடன் ரூபாய் 24 லட்சம் கோடியை தாண்டி விட்டது. வங்கிகளில் ரூபாய் 90,000 கோடி கடன் வாங்கிக் கொண்டு வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ற தொழிலதிபர்களை இன்றுவரை மோடி அரசால் கண்டுபிடித்து கைது செய்ய முடியவில்லை. ஏனெனில், அவர்கள் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மோடியின் நீண்டகால நண்பர்கள்.

இந்நிலையில் தமிழகத்திற்கு வந்த பிரதமர் மோடி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் வழங்கப்பட்ட நிதியை விட மூன்று மடங்கு தமிழகத்திற்கு அதிக நிதி வழங்கப்பட்டதாக கூறுகிறார். 2013 - 2014 இல் பட்ஜெட்டின் மொத்த செலவு ரூபாய் 16,65,297 கோடி, 2024-25 இல் பா.ஜ.க. ஆட்சியில் பட்ஜெட்டின் மொத்த செலவு ரூபாய் 48,20,512 கோடி. ஆண்டுக்கு ஆண்டு பட்ஜெட் தொகை வளர்கிற போது நிதி ஒதுக்கீடுகளும் வளரத் தான் செய்யும் என்று முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் கூறியிருக்கிறார். ஆனால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பெற்ற வளர்ச்சியைப் போல, மோடி ஆட்சியில் தமிழகம் பெற்ற வளர்ச்சி என்ன?.
ஒன்றிய அரசின் பழிவாங்கும் போக்கையும் மீறி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் அயராத உழைப்பினாலும், திறமையான நிர்வாகத்தினாலும் 10 ஆண்டுகளில் இல்லாத அளவில் 9.69 சதவிகித வளர்ச்சியைப் பெற்று இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. இதே வளர்ச்சி நீட்டிக்கப்பட்டு 2032 ஆம் ஆண்டில் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியை அடைய முடியும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நம்பிக்கையோடு வளர்ச்சிப் பாதையில் தமிழகத்தை அழைத்துச் செல்வதில் பீடுநடை போட்டு சாதனை படைத்து வருகிறார். பிரதமர் மோடி ஆட்சியில் இந்தியப் பொருளாதாரம் பேரழிவை சந்தித்து வருகிற நேரத்தில், தமிழகம் வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருப்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். எனவே மோடியினுடைய பிரச்சார உத்திகளுக்கு தமிழக மக்கள் என்றைக்கும் இரையாக மாட்டார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.