தேனி மாவட்ட அதிமுக சார்பில், 2021 சட்டமன்றத் தேர்தலுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், எம்.ஜி.ஆரை முதலமைச்சர் ஆக்கிய மாவட்டம் ஜெயலலிதாவை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் முதலமைச்சர் ஆக்கிய மாவட்டம் நமது தேனி மாவட்டம்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் ஒரே ஒரு எம்.பி.யாக தேனி நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெறவைத்து தேனி மாவட்டம் மீண்டும் அதிமுகவின் எஃகு கோட்டை என்பதை நிரூபித்துள்ளோம். வரும் சட்டமன்றத் தேர்தலில் தேனி மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.
டிடிவி தினகரன் இரண்டு தொகுதியில் போட்டியிடுவார் என்று அக்கட்சியினர் தெரிவித்திருந்தனர். அதில், ஒன்று ஆர்.கே.நகர் மற்றொன்று தேனி மாவட்டம் என்றும் தெரிவித்திருந்தனர்.
இந்தநிலையில், தேனி மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசியிருக்கிறார்.
சசிகலாவை அதிமுகவில் சேர்க்க முடியாது என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகக் கூறி வருகிறார். ஆனால் ஓ.பன்னீர்செல்வம் இதுகுறித்து எந்தவிதக் கருத்துகளையும் தெரிவிக்கவில்லை. சசிகலா, தினகரனுக்கு ஆதரவாக இருப்பதால்தான் ஓ.பன்னீர்செல்வம் இந்த விசயத்தில் மௌனமாக இருக்கிறார் என்று விமர்சனங்கள் எழுகிறது.
இந்தநிலையில் தேனியில் டிடிவி தினகரன் போட்டியிட்டு வெற்றி பெற்றால், சசிகலா, தினகரனுக்கு ஆதரவாக ஓ.பன்னீர் செல்வம் இருப்பதாகக் கூறப்பட்டது உண்மையாகும் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். இதனிடையே அமமுகவில் விருப்ப மனு பெறப்பட்டு வருகிறது. அமமுகவின் முதல் விருப்ப மனுவை முன்னாள் அமைச்சர் பழனியப்பன், 'டிடிவி தினகரன் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் போட்டியிட வேண்டும்' என அளித்திருக்கிறார். ஆகையால், டிடிவி தினகரன் எங்கு போட்டியிடுவார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.