மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளரை நீண்ட இழுபறிக்குப் பிறகு தொகுதிக்கு தொடர்பில்லாதவரை அறிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறது காங்கிரஸ் தலைமை.
நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, பாஜக என நான்கு முனை போட்டிகள் நிலவுகிறது. ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு, வேட்பாளர் அறிமுகக் கூட்டம், வேட்புமனு தாக்கல், பிரச்சாரம், விஐபிக்களை சந்திப்பது எனத் தேர்தல் களம் அனலாகத் தகிக்கிறது. திமுக ஒருபடி மேலே சென்று வேட்பாளர்களை அறிவித்த கையோடு தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டது.
ஆனால் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதிலேயே இழுபறிக்கு ஆளாகியது. மயிலாடுதுறை தொகுதிக்கான வேட்பாளரை வேட்பு மனு கடைசி நாளுக்கு முதல் நாள் வரை வேட்பாளர் அறிவிக்காமல் இழுத்தடித்து வந்தது.
இந்த நிலையில், மயிலாடுதுறை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக மகிளா காங்கிரஸ் சுதா ராமகிருஷ்ணன் என்பவரை அறிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கு பேரதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதிக்கு ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பரான பிரவீன் சக்கரவர்த்திக்குதான் சீட், அவர்தான் வெற்றி வேட்பாளர் என பிரபலப்படுத்தப்பட்டிருந்தது. அதேபோல் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், சிட்டிங் திருச்சி எம்பியுமான திருநாவுக்கரசுவுக்கு திருச்சி தொகுதி இல்லை என்றதும் மயிலாடுதுறை தொகுதியை வழங்கலாம் எனப் பரவலாக பேசப்பட்டு வந்தது. அதேபோல மூன்று முறை மயிலாடுதுறை எம்பியாகவும் மத்திய அமைச்சராக இருந்த மணிசங்கர் ஐயர் தனக்கு கடைசியாக ஒரு வாய்ப்பு வழங்க வேண்டுமென தலைமையில் மன்றாடி வந்தார். இந்த மூவரில் ஒருவருக்குத்தான் சீட் எனக் கூட்டணிக் கட்சிகள் மத்தியில் பேசப்பட்டு வந்தது. காங்கிரஸ் தலைமையோ வேட்பாளரைத் தேர்வு செய்வதில் பெரும் சிரமத்தை சந்தித்து வந்தது.
இந்த சூழலில், கடலூர் தொகுதியில் சீட்டு கேட்டு வந்த சுதா ராமகிருஷ்ணனை மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியின் வேட்பாளராக அறிவித்து அனைவருக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது.
மயிலாடுதுறை தொகுதியில் அதிமுக சார்பில், அதிமுகவின் மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் பவுன்ராஜியின் மகன் பாபு என்பவர் போட்டியிடுகிறார். அதேபோல பாரதிய ஜனதா கூட்டணியில் பாமகவை சேர்ந்த ம.க. ஸ்டாலின் என்பவர் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியில் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் முதல் ஆளாகக் களத்திற்கு வந்து சின்னமே இல்லாமல் பாதி பிரச்சாரத்தை முடித்துவிட்டார். இந்த சூழலில் காங்கிரஸ் வேட்பாளராக சுதா ராமகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்தவர் சுதா ராமகிருஷ்ணன். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் தமிழக மகிளா காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாரத் ஜூடோ யாத்திரை முழுவதும் ராகுல் காந்தியுடன் சுதா ராமகிருஷ்ணன் நடந்து சென்றவர். அதோடு இலங்கையில் உச்சக்கட்ட போர் நடைபெற்ற பொழுது, காங்கிரஸ் கட்சிக்கு எதிராக முழக்கம் எழுப்பியதோடு சோனியாவின் உருவப்படம் எரிக்கும் போராட்டத்தில் பங்கேற்று காங்கிரஸ் தலைமையின் கண்டிப்புக்கு ஆளானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மயிலாடுதுறை பாராளுமன்றத் தொகுதி திமுக, காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்து வந்தாலும் தற்போது தொகுதிக்கு சற்றும் தொடர்பு இல்லாத ஒரு நபரை அறிவித்திருப்பது திமுகவினரை சோர்வடையவே செய்துள்ளது. ஏற்கனவே மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் என்பதால் தொடர்ந்து சொந்த கட்சிக்கு வேலை செய்ய முடியாமல் கூட்டணிக் கட்சிக்காகவே வேலை செய்யும் நிலைமை இருக்கிறது. இரண்டரை லட்சம் வாக்கு வித்தியாசத்தில் சிட்டிங் திமுக எம்.பி. ராமலிங்கம் வெற்றி பெற்ற இந்தத் தொகுதியில் இம்முறை சற்று கடினமானது என்கிறார்கள் அரசியல் அறிந்தவர்கள்.