Skip to main content

செந்தில்பாலாஜி வெற்றிக்கு எதிராக வழக்கு தொடர்ந்த சென்னை பெண் 

Published on 11/03/2019 | Edited on 11/03/2019

 

தமிழகத்தில் 21 சட்டமன்றத் தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், 18 தொகுதிகளில் மட்டும் இடைத்தேர்தல்  நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 3 தொகுதிகளில், வழக்கு நிலுவையில் உள்ளதால் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளில் வழக்குகள் காரணமாக இடைத் தேர்தல் நிறுத்தப்பட்டுள்ளன.


திருப்பரங்குன்றம் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றதை எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணன் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். ஒட்டப்பிடாரத்தில் கடந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சுந்தர்ராஜ் வெற்றி பெற்றார். 463 வாக்குகள் வித்தியாசத்தில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தோல்வி அடைந்தார். இதையடுத்து சுந்தர்ராஜ் வெற்றி செல்லாது என்று வழக்கு தொடர்ந்தார். 

 
சென்னையை சேர்ந்த தேசிய மக்கள் சக்தி கட்சியின் மாநில மகளிர் அணி தலைவர் கீதா என்பவர் தொடர்ந்த வழக்கினால்தான் அரவக்குறிச்சி இடைத்தேர்தல் நடத்தப்படுவது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வழக்கு தொடர்ந்த கீதா கூறியதாவது:-
 

நான் சென்னை கோடம்பாக்கத்தில் வசிக்கிறேன். அரவக்குறிச்சி சட்டசபை தேர்தல் நடந்த போது அதில் அ.தி.மு.க. சார்பில் செந்தில்பாலாஜியும், தி.மு.க. சார்பில் கே.சி.பழனிசாமியும், போட்டியிட்டனர். பணப்புழக்கம் அதிகம் இருந்தது குறித்து வந்த புகார்களின் அடிப்படையில் அந்த தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் ரத்து செய்யப்பட்டது.
 

பணப்புழக்கம் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து நான் பொது நல வழக்கை சென்னை கோர்ட்டில் தொடர்ந்தேன். கோர்ட்டு அந்த வழக்கை ஏற்காததோடு எனக்கு அபராதமும் விதித்தது.


 

Senthil Balaji


தொடர்ந்து மீண்டும் அரவக்குறிச்சி தேர்தல் நடத்த அறிவிப்பு வந்தபோது நான் அந்த தேர்தலில் போட்டியிட்டேன். தேர்தலில் செந்தில் பாலாஜி வெற்றி பெற்றார். அதன்பின்னர் நான் அந்த தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் என்ற முறையில் ஏற்கனவே பணப்பட்டுவாடா பிரச்சனையில் தேர்தல் நிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் நடந்த தேர்தலில் செந்தில்பாலாஜி, கே.சி. பழனிசாமி ஆகியோரை நிற்க அனுமதித்தது தவறு என்றும், செந்தில் பாலாஜியின் வெற்றி செல்லாது என்றும் வழக்கு தாக்கல் செய்தேன்.
 

அந்த வழக்கிற்கு செந்தில் பாலாஜி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தடை ஆணை வாங்கினர். இப்போது அந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இதன் காரணமாகத்தான் அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை என கூறினார்.
 

saravanan


 

தீர்ப்பை விரைவாக வழங்க கோரிக்கை
 

திருப்பரங்குன்றம் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றதை எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணன் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். இன்று இந்த வழக்கில் டாக்டர் சரவணனுக்காக வக்கீல் அருண் ஆஜராகி, இந்த வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்து விட்டது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தீர்கள். இந்த நிலையில், இந்த பாராளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்துள்ளது.
 

இந்த வழக்கை காரணம் கூறி, ஐகோர்ட் மீது பொறுப்பினை சுமத்தி திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை அறிவிக்கவில்லை. எனவே, இந்த வழக்கின் தீர்ப்பை விரைவாக வழங்க வேண்டும் என்று கூறினார். அதற்கு நீதிபதி, தங்களது கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று கூறினார்.
 

 

 

சார்ந்த செய்திகள்