Skip to main content

வைகோவுக்கு ஸ்டாலின் கொடுத்த மரியாதை, உறுதி!

Published on 15/03/2019 | Edited on 15/03/2019

இன்று திமுக கூட்டணிக் கட்சிகளின் தொகுதிப் பங்கீடு பட்டியல் வெளியிடப்பட்டது. திமுக 20 தொகுதிகள், காங்கிரஸ் 10 தொகுதிகள் (புதுச்சேரி உள்பட), கம்யூனிஸ்ட் கட்சிகள் இரண்டிற்கும் தலா இரண்டு தொகுதிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இரண்டு, மற்றும் பிற கூட்டணிக் கட்சிகளுக்கும் எந்தெந்தத் தொகுதிகள் என்ற பட்டியல் வெளியிடப்பட்டது.
 

stalin with vaiko



பட்டியலை வெளியிட செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அருகே மதிமுக தலைவர் வைகோ அமர்ந்திருந்தார். தொகுதிப் பங்கீடு பட்டியலை வாசித்த ஸ்டாலின், திமுக, காங்கிரசுக்கு அடுத்தபடியாக மதிமுகவின் பெயரை குறிப்பிட்டு, மதிமுகவுக்கு ஈரோடு தொகுதி முடிவு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். தொகுதி எண்ணிக்கையின் அடிப்படையில் வரிசைப்படுத்தினால் மதிமுக இன்னும் சற்று தள்ளியே வரும் என்றாலும் மூன்றாவதாக மதிமுகவின் விவரத்தை வெளியிட்டார். பின்னர் மற்ற கட்சிகள் குறித்த விவரங்களை வெளியிட்டு, இறுதியில் மீண்டும் ஒருமுறை மதிமுக குறித்துப் பேசினார். "ஏற்கனவே அறிவிக்கப்பட்டதுதான், இருந்தாலும் மீண்டும் சொல்கிறேன். மதிமுக ஈரோடு தொகுதியில் போட்டியிட்டாலும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் சீட்டும் அதற்கான நேரம் வரும்பொழுது மதிமுகவுக்கு அளிக்கப்படும்" என்று கூறினார்.

நாடாளுமன்ற தேர்தலில், திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு மக்களவை தொகுதி, ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி ஒதுக்கப்பட்டது, குழப்பத்துடனும் சற்று ஏமாற்றத்துடனும் எதிர்கொள்ளப்பட்டது. இரண்டு, மூன்று சுற்று பேச்சுவார்தைகளுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்தது. அந்த அறிவிப்பின் போதும் வைகோ உற்சாகம் குன்றி காணப்பட்டார். இதை சரி செய்யும் விதமாகத்தான் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் மதிமுவுக்கு உறுதி கொடுத்தார் ஸ்டாலின் என்று கூறப்படுகிறது.      

 

 

 

சார்ந்த செய்திகள்