"கூட்டத்தொடர் நடக்கும் நேரத்திலும் சட்டமன்ற வளாகத்தில் இருக்கும் கேண்டீன்கள் மூடியுள்ளதாக கூறுகின்றனர். இது பத்திரிகையாளர்களையும் எம்.எல்.ஏ.க்களுடன் வரும் கட்சிக் காரர்களையும் கஷ்டப்படுத்தியாக சொல்லப்படுகிறது. அதனால்தான் துரைமுருகன், தமிழ்நாட்டில் சட்டமன்றமும் டாஸ்மாக்கும்தான் திறக்கப்பட்டிருக்கு என்று நக்கலடித்து இருந்தார்.
மேலும் சட்டமன்றத்தில் பேசிய எடப்பாடி, தமிழகத்தில் கட்டுமானப் பணிகளுக்கு 80%பேர் எம் சாண்ட்டைத்தான் பயன்படுத்துகிறார்கள் என்றும், மணல் திருடர்கள் கைது செய்யப்படுகிறார்கள் என்றும் கூறியிருக்கிறார். அதோடு 80% பேர் எம்.சாண்ட் பயன்படுத்துறதாக முதலமைச்சர் கூறினாலும், அவரோட பி.ஏ. தரப்பு ஆற்று மணலைத்தான் நம்பியிருப்பதாக சொல்கின்றனர். எடப்பாடியின் பி.ஏ.க்களில் ஒருவரான சேகருக்கு வேண்டிய பெரிய டீமே மணல் அள்ளிக் கொண்டு இருப்பதாக சொல்கின்றனர். திருவள்ளூரில் இருந்து கடலூர் வரை, ஒரு லோடு ரூபாய் 45 ஆயிரம் வீதம் விற்கப்படுகிறது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று அறிவித்த காவிரி காப்பாளர் பட்டம் வாங்கிய எடப்பாடி ஆட்சியில், டெல்டா மாவட்ட ஆறுகளை ஒட்டிய பகுதிகளில் மணலை எடுத்து ஒரு டிராக்டர் டிப்பர் மண் 6 ஆயிரம் ரூபாய் என்று விற்பதாக சொல்லப்படுகிறது. எம்.சாண்ட் பயன்படுத்துகிற மாநிலத்தில் யாருக்காக இந்த மணல் அள்ளப்படுகிறது. அதன் வருமானம் யார், யாரின் கஜானாவை நிரப்புகிறது? கைதாக வேண்டிய மணல் திருடர்கள் பலரும் கோட்டையில் உள்ளவர்களிடம் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று ஆளுந்தரப்பிலிருந்து குற்றம்சாட்டப்படுகிறது. அதிக விலை கொடுத்து மணல் வாங்குவதால் பணிகள் பாதிக்கப்படும் கட்டுமானத்துறையினரும் புலம்பி வருவதாக சொல்லப்படுகிறது.