அண்மையில் தமிழக அரசு பொங்கல் பரிசு தொடர்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சை அரிசி மற்றும் சர்க்கரை வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டிருந்தார். இந்தமுறை பொங்கல் தொகுப்பில் கரும்பு இடம்பெறாதது கரும்பு பயிரிட்ட விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதிமுக, பாஜக, தமாக உள்ளிட்ட கட்சிகள் பொங்கல் தொகுப்பில் கரும்பு சேர்க்கப்பட வேண்டும். அதேபோல் பொங்கல் பரிசுத் தொகையானது ஐந்தாயிரம் ரூபாய் என உயர்த்தி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், ''இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் தவிர்க்க முடியாத தலைவராக இருந்தவர் ராஜாஜி. வடநாட்டில் மாபெரும் தலைவர்கள் எல்லாம் நிறைய பேர் இருந்தார்கள். நேரு, படேல், காந்தி, ராஜேந்திர பிரசாத் என்று பட்டியல் நீண்டு கொண்டே போனது. ஆனால் தென்னாட்டில் அப்படி குறிப்பிட்டு சொல்லக்கூடிய பெரிய மனிதர் நம்முடைய ராஜாஜி தான். வடநாட்டில் இருந்த அத்தனை பேருடைய அறிவுக்கு ஈடாக தன் அறிவை பயன்படுத்தியவர் ராஜாஜி என்று சொல்லலாம். ஆனால் அவருடைய வாழ்க்கையில் எதிர்நீச்சல் போடுபவர். எதை கண்டும் கவலைப்படாதவர். காஷ்மீரை பிரித்துக் கொடுக்க வேண்டும் என்று சொன்னவரும் அவர்தான்;பாகிஸ்தானை பிரியுங்கள் என்று சொன்னவரும் அவர்தான்.
அவர் என்ன சொன்னாரோ அது பின்னால் நடந்து போய்விட்டது. அதனால்தான் அவரை ஒரு தீர்க்கதரிசி என்று சொல்வார்கள். தன் மனதுக்கு பட்டதை சரி அல்லது இல்லை என்று சொன்னால் மாற்றிக் கொள்ளுகிற ஒரு பெருந்தன்மை ராஜாஜிக்கு இருக்கிறது. இந்தியை திணித்தவரும் அவர்தான்; இந்தியை மறுபடியும் திணிக்கக் கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டவரும் அவர்தான்; காங்கிரஸ் தான் இந்த நாட்டிற்கு தேவை என்று சொன்னவரும் அவர்தான்; காங்கிரசை ஒழித்தே தீருவேன் என சுதந்திராகட்சி ஆரம்பித்தவரும் அவர்தான். இதை பல்டி அடித்தார் என்று சொல்லமாட்டேன். காலபோக்கில் பரிணாம வளர்ச்சியில் இன்று சரி என்று பட்டது மறுநாள் சரி என்று படாமல் கூட போகலாம். பரிணாம வளர்ச்சியில் ஏற்படுகின்ற ஞானத்தை அடிப்படையாக செயல்பட்டிருக்கிறார். ஆனால் எப்படி இருந்தாலும் தமிழ்நாட்டு அரசியலில் விரல் விட்டு எண்ணக்கூடிய மாபெரும் அறிஞர்களில் ஒருவர் ராஜாஜி என்பதை எவராலும் மறுக்க முடியாது'' என்றார்.
அப்பொழுது செய்தியாளர் ''ஒருவர் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இல்லை விவசாயிகள் எல்லாம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்; எதிர்க்கட்சித் தலைவர் 5000 ரூபாய் கொடுக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்'' என கேட்க ''கரும்பு மார்க்கெட்ல இருக்கு; கரும்பு வயலில் இருக்கு; கரும்பு எங்கும் இருக்கிறது'' என்று சொல்லிவிட்டு கிளம்பினார்.