இந்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தான், தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சட்டமன்றத் தேர்தல்கள் அடுத்த வருடம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாகப் பார்க்கப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டும், அதே சமயம் 2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்காகவும் அரசியல் கட்சிகள் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றன.
இதனிடையில், ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், சச்சின் பைலட்டுக்கும் இடையே உட்கட்சி மோதல் கடுமையாக நிலவி வருகிறது. சச்சின் பைலட், ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜேவின் பா.ஜ.க. ஆட்சியின் போது நடைபெற்ற ஊழல் குறித்து நடவடிக்கை எடுக்கும்படி தொடர்ந்து வலியுறுத்தி அசோக் கெலட்டுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார். இருப்பினும் காங்கிரஸ் கட்சியின் டெல்லி தலைமை ராஜஸ்தானில் மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள பல்வேறு தேர்தல் பணிகளைத் தொடங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் காங்கிரஸ் சார்பில் டெல்லியில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டமானது, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நடந்தது. இதில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் சுக்ஜிந்தர் ரந்தவா, ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் மற்றும் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். மேலும், காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதன் காரணமாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் காணொளி மூலம் இந்த கூட்டத்தில் பங்கேற்றார்.
இந்த ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு காங்கிரஸ் பொதுச் செயலாளர் வேணு கோபால், “ராஜஸ்தான் மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட முதல்வர் வேட்பாளர் யார் என்பதை இன்னும் அறிவிக்கவில்லை. அதே நேரம் காங்கிரஸ் கட்சி இந்தத் தேர்தலை ஒற்றுமையாக எதிர்கொள்ள காத்திருக்கிறது” என்று தெரிவித்தார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவிக்கையில், “ராஜஸ்தானில் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் என அனைத்து தரப்பினரும் காங்கிரஸ் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். இவர்கள் அனைவரது விருப்பங்களையும் காங்கிரஸ் கண்டிப்பாக நிறைவேற்றும்” எனக் கூறினார்.
அதனைத் தொடர்ந்து, ராஜஸ்தான் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் பேசியபோது, “ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுவதற்காக அனைவரும் ஒன்றாக செயல்படுவோம். இங்கு ஆளும் கட்சிக்கு மீண்டும் வாக்களிக்கும் மனநிலையில் தான் ராஜஸ்தான் மக்கள் இருக்கின்றனர். அதனால், ராஜஸ்தானில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைப்பதற்கான அத்தனை விவகாரங்கள் குறித்தும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசப்பட்டது” என்று கூறினார்.