2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதிக்கு முன்பு, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு இடம்பெயர்ந்த இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையிலான குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா டிசம்பர் 9 ஆம் தேதி தாக்கல் செய்தார். நீண்ட விவாதத்திற்கு பிறகு மக்களவையில் இந்த சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து டிசம்பர் 11 அன்று மாநிலங்களவையில் இந்த மசோதாவை அமித்ஷா அறிமுகம் செய்தார். மக்களவையை போலவே மாநிலங்களவையில் இந்த மசோதா மீது காரசார விவாதங்கள் நடைபெற்றன. இறுதியில் மசோதா மீதான வாக்கெடுப்பின் போது, மசோதாவுக்கு ஆதரவாக 125 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் கிடைத்தன. இரு அவைகளிலும் மசோதா வெற்றிபெற்ற நிலையில், நேற்று நள்ளிரவு இந்த சட்ட திருத்தத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
இந்த நிலையில் இலங்கை தமிழர்களை அங்கீகரிக்காத குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு பாமக ஆதரவு அளித்தது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும் போது, கூட்டணி என்றால் ஆதரித்து தான் ஆக வேண்டும். பா ம.கவின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கி அவர்களை அங்கீகரிக்க வேண்டும் என்பதே எங்கள் நிலை. நாங்கள் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவிற்கு ஆதரவளித்தது ஈழத்தமிழர்களுக்கு எதிரான வாக்கு இல்லை என்றும் ராமதாஸ் பதிலளித்தார். இதற்கு சமூக வலைத்தளங்களில் கூட்டணியில் இருந்தால் எந்த மசோதாவாக இருந்தாலும் ஆதரவு கொடுப்பீர்களா, எது சரி, எது தவறு என்று பார்க்க மாட்டீர்களா என்றும், கூட்டணியில் இருப்பதால் கூட்டணி கட்சிகள் முடிவு எடுக்கும் திட்டம் அனைத்துக்கும் ஆதரவு கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்றும் ராமதாஸ் கூறிய பதிலுக்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.