
புதுக்கோட்டை மாவட்டம் திமுக மாநகரச் செயலாளர் செந்தில் உயிரிழந்ததைத் தொடர்ந்து அந்த பதவிக்கு அவரது மகன் கணேஷை நியமனம் செய்ய வேண்டும் என்றும், அதனால், அதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் என்றும் அமைச்சர் நேரு மாவட்ட நிர்வாகிகளிடம் கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், மாவட்ட பொறுப்பாளர்கள் சம்மதம் தெரிவித்தாலும், இந்த பதவிக்காக பல வருடங்களாக கட்சிப் பணியில் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட பலரும் மாநகர பதவி தங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று தங்களுடைய சுய விபர கோப்புகளைக் கட்சியின் தலைமைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், தங்களுக்கு பரிந்துரை செய்யக் கட்சியில் ஒவ்வொருத்தரும் ஒருத்தரை பிடித்து வைத்துக்கொண்டு தலைமையின் அறிவிப்பிற்காக காத்திருந்தனர்.
இந்த நிலையில் தான் கடந்த 12 ஆம் தேதி திமுக கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகனின் அறிவிப்பு புதுக்கோட்டை மாநகர திமுகவினரை கொந்தளிக்க வைத்துவிட்டது. மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம். அப்துல்லாவின் ஆதரவாளரான வடக்கு மாவட்ட தொண்டரணி அமைப்பாளரான ராஜேஷ் திமுக மாநகர பொறுப்பாளராக நியமித்து அறிவிப்பு வெளியானது. இதுதான் மாவட்டத்தின் மொத்த வட்டச் செயலாளர்களையும் கொந்தளிக்க வைத்தது. அதன்பிறகு திமுக மாவட்ட அலுவலகம் முற்றுகை, தர்ணா, சாலை மறியல் உள்ளிட்டவை நடந்து ஓய்ந்தது.
இந்த நிலையில் நேற்று(13.3.2025) காலை புதுக்கோட்டையில் புதிய பேருந்துகள் தொடக்க விழாவிற்கு வருகை தந்த தெற்கு மாவட்டச் செயலாளரான அமைச்சர் ரகுபதியை சந்தித்து இது தொடர்பாக நியாயம் கேட்ட வேண்டும் என்று நிர்வாகிகள் முடிவெடுத்தனர். இதனை அறிந்த அமைச்சர் ரகுபதி, கட்சி விஷயத்தை பொது இடத்தில் வைத்து பேச வேண்டாம். இந்த விவகாரம் குறித்து கட்சித் தலைமைக்கு தெரிவிக்கப்பட்டடு விட்டது. நாளை(இன்று) அனைவரும் சென்னை வாருங்கள் கட்சியின் தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் வைத்து பேசிக்கொள்ளலாம் என்று கூற, நிர்வாகிகள் அமைதி காத்தனர்.
அதன்படி புதுக்கோட்டை மாவட்ட திமுக வட்டச் செயலாளர்கள் 42 பேரில் 39பேர் இன்று காலை வேன், கார்களில் ஏறி சென்னை அறிவாலயம் சென்றுள்ளனர். அதேபோல் மாநகர செயலாளர் பதவியை எதிர்நோக்கிக் காத்திருந்த அரு.வீரமணி, எம்.எம்.பாலு, சுப. சரவணன் உள்ளிட்ட மேலும் சிலர் அறிவாலயம் நோக்கிச் சென்றுள்ளனர். இன்று மாலை துணை முதல்வர் உதயநிதி மற்றும் மாநில பொறுப்பாளர்களை சந்தித்து பேசிய பிறகு என்ன நடக்குமோ என்று புதுக்கோட்டை திமுகவினர் காத்திருக்கின்றனர்.