
தமிழக சட்டப்பேரவையில் 2025 - 2026ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று (14.03.2025) தாக்கல் செய்தார்.
இதில், புதிய அரசு கலைக் கல்லூரிகள், மாணவர்களுக்கு கல்விக் கடன், புதிய நூலகங்கள், ஐ.ஏ.எஸ் தேர்ச்சியை அதிகரிக்க நிதி ஒதுக்கீடு, கட்டுமான தொழிலாளர்களுக்கு முழு உடற்பரிசோதனை அட்டை மற்றும் குழு காப்பீட்டு திட்டம், 14 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு கருப்பை புற்றுநோய் தடுப்பூசி, டைடல் பூங்கா, காலணி தொழிற்பூங்கா, புதிய விமான நிலையம், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உயர்கல்வி பயில தமிழ் புதல்வன் மற்றும் புதுமைப் பெண் திட்டம், பழங்குடியின மாணவர்களுக்கு மேல்நிலைப் பள்ளிகள், அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள், 1 லட்சம் புதிய கான்கிரீட் வீடுகள், சாலை விரிவாக்கம், மேம்பாலம், புதிய நகரம், புதிய நீர்த்தேக்கம், அதிவேக ரயில் சேவை உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின. தமிழக அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கை குறித்து தமிழக அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையில் இன்று (15-03-25) தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த பட்ஜெட்டை இன்று காலை 9:30 மணிக்கு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். இதனைத் தொடர்ந்து மார்ச் 17ஆம் தேதி முதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் துறை ரீதியான மானியக் கோரிக்கை ஆகியவை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.