
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (08.06.2021) தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். இந்நிலையில் திருச்சி பெரிய மிளகுபாறையல் உள்ள கட்சி அலுவலகத்தின் முன்பு மாவட்டச் செயலாளர் திராவிடமணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு வழங்கும் தடுப்பூசியின் அளவை அதிகப்படுத்தி தர வேண்டும், செங்கல்பட்டு தடுப்பூசி நிறுவனத்தை உச்ச நீதிமன்ற உத்தரவுபடி தமிழ்நாடு அரசிடம் வழங்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்டச் செயலாளர் சுரேஷ், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சிவசூரியன், இந்திய மாணவர் அமைப்பின் நிர்வாகிகள் இப்ராஹிம், வினோத் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்தப் போராட்டத்தின்போது செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினரான இந்தர்ஜித், “பெட்ரோல், டீசல் விலை மே மாதத்தில் மட்டுமே 16 முறை ஏற்றப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 20 டாலருக்கும் குறைவாக இருக்கிறது. கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 110 டாலருக்கு மேல் கச்சா எண்ணெய் விலை இருந்தபோதும் 76 ரூபாய்க்குத்தான் விற்றது. ஆனால், தற்போது ரூ. 100 எனும் அளவிற்கு வந்திருக்கிறது. இதில் மத்திய அரசு வரியாக மட்டும் 35 ரூபாய் பெறுகிறது. இது தவிர மாநில அரசு வரியை சேர்க்கிறது. தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்க வேண்டும். செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை தமிழ்நாடு அரசிடமே ஒப்படைக்க வேண்டும். அதேபோல், அங்கு உற்பத்தியைத் துவங்குவதற்கு ஏற்பாடுகளையும் செய்து தர வேண்டும். இன்னும் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய 40% ஜி.எஸ்.டி. பங்கை தரவில்லை. அதேபோல் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலிருந்து ஒருவரும் அந்த ஜி.எஸ்.டி. கவுன்ஸிலில் இடம்பெறவில்லை” என்று தெரிவித்தார்.