தேசிய கட்சியான பா.ஜ.க.வுக்கு அதன் நிர்வாகிகளில் சிலர் தொடர்ந்து கெட்ட பெயர் ஏற்படுத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலும் பா.ஜ.க. நிர்வாகிகள் இருவர் மீது பண மோசடி வழக்குப் பதிவாகியுள்ளது. இதில் கொடுமை என்னவென்றால், மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் இருவரால் பாதிக்கப்பட்டவர் மாநகர பா.ஜ.க. துணைத்தலைவர் என்பதுதான். விருதுநகர் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் சுரேஷ்குமாரும், விருதுநகர் மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் கலையரசனும் சிவகாசி அருகிலுள்ள திருத்தங்கல்லைச் சேர்ந்தவர்கள். இவ்விருவரும் சிவகாசி மாநகர பாஜக துணைத் தலைவர் பாண்டியனிடம், அவருடைய மகன்களான கார்த்திக் மற்றும் முருகதாஸ் ஆகியோருக்கு தூத்துக்குடி கப்பல் துறைமுகத்திலும், தென்னக ரயில்வேயிலும் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, கடந்த 2017-ல் ரூ.11 லட்சம் பெற்றுள்ளனர். கடந்த 5 வருடங்களாக வேலை வாங்கித் தராமல், பணத்தையும் திருப்பித் தராமல் இருந்துள்ளனர்.
இந்நிலையில், பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் பாண்டியன் முறையிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து ரூ.2 லட்சம் வீதம் 5 காசோலைகளும் ரூ.1 லட்சத்துக்கு ஒரு காசோலையும் பாண்டியனிடம் தந்தனர். அதில் ஒரு காசோலையைத் திரும்பப் பெற்றுக்கொண்டு ரூ.2 லட்சம் ரொக்கம் கொடுத்துள்ளனர். மற்ற காசோலைகள் வங்கியிலிருந்து திரும்பியதால் சுரேஷ்குமார் மற்றும் கலையரசன் மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் பாண்டியன் புகாரளித்தார்.
தற்போது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கலையரசனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுரேஷ்குமார் இன்னும் கைது செய்யப்படவில்லை. பாண்டியன் அளித்த புகாரில் பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசனின் பெயரும் இடம்பெற்றுள்ளது. சுரேஷ்குமாரும் கலையரசனும், ராம ஸ்ரீனிவாசன் மூலம் அரசு வேலைக்கு ஏற்பாடு செய்து தருவோம் என்று பாண்டியனிடம் கூறியிருக்கின்றனர்.
2008-ல் ராம ஸ்ரீனிவாசன் சிவகாசி பெல் ஹோட்டலில் தங்கியிருந்தபோது, மீதி பணம் ரூ.2 லட்சத்தையும் சான்றிதழ்களையும் எடுத்துக்கொண்டு வரும்படி இருவரும் பாண்டியனிடம் கூற, அவரும் சென்றுள்ளார். பெல் ஹோட்டலுக்கு எதிரிலுள்ள விநாயகர் கோவிலில் நின்ற இருவரும், பாண்டியனிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு, ராம ஸ்ரீனிவாசன் ரயில்வே அதிகாரிகளுடன் வந்திருப்பதாகவும், பெல் ஹோட்டல் அறையில் அதிகாரிகளுடன் பேசிக் கொண்டிருப்பதாகவும் கூறியிருக்கின்றனர். பிறகு, பணத்துடன் பெல் ஹோட்டலுக்குச் சென்ற அவ்விருவரும், ஒரு மாதத்தில் வேலை கிடைத்துவிடும் என்று உறுதியளித்திருக்கின்றனர். இந்த விவகாரம், பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலையின் கவனத்துக்குச் சென்று, அதன்பிறகே புகாராகி காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நிலையில், பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசனைத் தொடர்புகொண்டோம். “இப்போதுதான் என் கவனத்துக்கே வந்தது. இந்த விவகாரத்துல என் பெயர் அடிபடுறதுல அரசியல் இருக்க வாய்ப்பில்லை. இதை நான் அப்படி பார்க்கவில்லை. என் மீதான பொய்யான குற்றச்சாட்டு இது. நான் ரயில்வேயில் எந்தப் பொறுப்பிலும் இல்லை. ரயில்வே அதிகாரிகள் எதற்காக என்னை சிவகாசி பெல் ஹோட்டலுக்கு வந்து பார்க்கவேண்டும்? அவர்களிடம் பணம் கொடுத்தது எதுவும் எனக்கு தெரியாது. கட்சிக்காரர்களாக இருந்தாலும், யாராக இருந்தாலும், என் பெயரை யார் பயன்படுத்தியிருந்தாலும், அது கண்டிக்கத் தகுந்தது. புகாரென்று வரும்போது நிறைய பெயர்களைச் சேர்த்துக் கொடுப்போம் என்று புகார்தாரர் நினைத்திருக்கலாம். அல்லது, குற்றம் சாட்டப்பட்டவர்களே என் பெயரைப் பயன்படுத்தியிருக்கலாம். என்னவென்று தெரியவில்லை. இதுகுறித்து விசாரிக்க வேண்டும்.
பொது வாழ்க்கையில் யார் பிரபலமாக இருக்கிறார்களோ, அவங்க பெயரைச் சொல்லித்தானே, இந்த மாதிரி நடந்துக்கிறாங்க? மினிஸ்டர்கிட்ட சொல்லி வாங்கித் தர்றேன். எம்.எல்.ஏ.கிட்ட சொல்லி வாங்கித் தர்றேன். எம்.பி. மூலமா வாங்கித் தர்றேன்னு சொல்லித்தானே ஏதாவது பண்ணுறாங்க இல்லையா? அப்புறம் பெட்டிஷன் கொடுத்தவருக்குமே நான் யாரு, என்னன்னு தெரிஞ்சிருக்காது. கட்சிக்காரர்கள் தவறு செய்திருந்தால் நிச்சயம் கட்சி நடவடிக்கை எடுக்கும். இதுபோன்ற விஷயங்கள்ல, நடவடிக்கை எடுத்தே ஆகணும்கிறதுல, எங்க மாநிலத் தலைவர் அண்ணாமலை ரொம்ப உறுதியா இருக்காரு. இதுல சமரசமாகமாட்டார்.” என்றார்.