மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் நக்கீரன் இணையதளத்திற்கு பேட்டி அளித்தார்.
ஒரே நாளில் திமுகவுடனும், அதிமுகவுடன் தேமுதிக பேசியதாக செய்திகள் வெளியானதை எப்படி பார்க்கிறீர்கள்? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர்,
''திமுகவிடம் முதலில் பேசினார்கள். சீட் அதிகமாக கேட்டதால், எங்களிடம் தோழமை கட்சிகளுக்கு கொடுக்க வேண்டியிருப்பதால் இல்லை என்று கூறிவிட்டனர். அதற்கு பிறகு அதிமுகவுடன் பேசுகிறார்கள். அங்கு ஒத்துவரவில்லை என்றதும், மீண்டும் திமுகவிடம் பேசுவது என்ன அரசியல் என்றே தெரியவில்லை. என்ன வியாபாரமா நடக்கிறது?. அவர்கள் பேசுவது கூட்டணிபோல் தெரியவில்லை. வியாபாராமாக தெரிகிறது. இதற்கு மேலேயும் இந்த கட்சியை அதிமுக சேர்த்துக்கொண்டால் அதிமுகவை என்னவென்று சொல்லுவது. ஒரு பிரதமர் பங்கேற்கும் கூட்டத்தில் போட்டோவை வைக்கிறார்கள். எடுக்கிறார்கள். மீண்டும் சொல்கிறேன் அது அரசியல் கூட்டணி இல்லை. வியாபாரிகள் கூட்டணி. தேமுதிக கடைசி நேரத்தில் நடந்து கொண்ட விதம் அரசியல் அநாகரீகம். அரசியலுக்கே ஒரு இழுக்கு.
மோடி வரும் மேடையில் போட்டோவை வைத்து எடுத்துவிட்டார்கள். அந்த கூட்டத்தில் பாதி கொடி கம்பத்தில் கொடிகளே இல்லை. தேமுதிக வரவில்லை என்றதும் வேறு கட்சிகளின் கொடிகளை ஏற்றுகிறார்கள். அந்த நேரத்தில் திமுகவிடம் இவர்கள் பேசுகிறார்கள். அதன் பிறகு எந்த நேரமும் கதவு திறந்தே இருக்கிறது என்று அதிமுக கூறுகிறது. இது என்ன அரசியல். தமிழ்நாட்டு மக்களை எவ்வளவு கேவலப்படுத்துகிறார்கள். நாடே சிரிக்கிறது. தேமுதிக எவ்வளவு கேவலமாக நடந்து கொள்கிறதோ, அதைவிட கேவலமாக நடந்து கொள்கிறது அதிமுக. இவையெல்லாம் விஜயகாந்த் கவனத்திற்கு தெரிந்து நடக்கிறதா? என்பது எனக்கு தெரியவில்லை. இல்லை விஜயகாந்த் பெயரை வைத்துக்கொண்டு இவர்கள் நடத்தும் வியாபாரமா? என்பது சந்தேகமாக இருக்கிறது. விஜயகாந்த்தின் கவனத்தோடுதான் நடக்கிறது என்றால் அவரை பேட்டிக்கொடுக்க சொல்ல வேண்டியதுதானே? ஏன் அவரை சீனில் காட்டவில்லை. தலைவர்கள் சென்றால் பேச்சுவார்த்தை நடத்துகிறார் என்று சொல்லுகிறார்களே? இதுதான் நடந்தது என்று அவரை பேட்டி கொடுக்க வைக்க வேண்டியதுதானே? ஏன் பிரேமலதாவும், சுதீஷும் பேட்டி அளிக்கிறார்கள்.'' இவ்வாறு கூறினார்.