மோடி சமுதாயத்தை இழிவுபடுத்திவிட்டதாக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட வழக்கில் இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் மற்றும் காங்கிரஸ் கூட்டணிக் கட்சியின் தலைவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.
தகுதி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில், 'நாட்டின் குரலுக்காக நான் போராடுகிறேன்; நாட்டுக்காக எந்த விலையும் கொடுக்கத் தயார்' எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவரது டிவிட்டர் பக்கத்தின் பையோ எனப்படும் சுய விவர குறிப்பில் 'தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.பி' என திருத்தியுள்ளார்.
ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அவருக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகள் அனைத்தும் உடனடியாக ரத்தாகும். இந்நிலையில் அவருக்கு நோட்டீஸ் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. எம்.பி. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் அரசு பங்களாவை ஏப்ரல் 22 ஆம் தேதிக்குள் காலி செய்ய வேண்டும் என ராகுல் காந்திக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டது.