
வடகிழக்கு பருவமழை தமிழகத்தின் தென் மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாகப் பெய்து வருகிறது. இதனையொட்டி தென் மண்டல வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் பா. செந்தாமரை கண்ணன் நேற்று (23.11.2024) வெளியிட்டிருந்த வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில், ‘தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, காலை 08.30 மணி அளவில் பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்தியப் பெருங்கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற 25ஆம் தேதி வாக்கில், தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இது மேலும் அதற்கடுத்த இரு தினங்களில் வடமேற்கு திசையில் தமிழகம் இலங்கை கடற்கரையை நோக்கி நகரக்கூடும். பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்தியப் பெருங்கடல் பெரு பகுதி மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதி முதல் குமரிக்கடல் பகுதி வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது’ எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் இன்று (24.11.2024) வெளியிடப்பட்டுள்ள வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி ஆகிய 6 மாவட்டங்களில் இன்று (24.11.2024) காலை 10 மணிக்குள்ளாக இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதே போன்று புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.