Published on 06/02/2020 | Edited on 06/02/2020
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தங்கள் டெல்லித் தலைமை மீதான ஆதங்கத்தை, கட்சிப்பிரமுகர் ஒருவரின் பிறந்தநாள் விழாவில் கொட்டித் தீர்த்துவிட்டார் என்று கூறுகின்றனர். காங்கிரஸ் பிரமுகரும் தங்கபாலுவின் ஆதரவாளருமான தாமோதரனின் பிறந்தநாள் விழா 2-ந் தேதி ஒரு ஓட்டலில் நடைபெற்றது. இதில் தங்கபாலுவை வைத்துக்கொண்டே பேசிய கே.எஸ். அழகிரி, சுய மரியாதையோடு அரசியல் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். அது முடியாது போலிருக்கிறது. அரசியலில் யாரையும் அட்டைபோல் நாம் ஒட்டிக்கிட்டு இருக்கக்கூடாது. முன்பெல்லாம் காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று கூறினோம். தற்போது அதை எல்லாம் மறந்துவிட்டோம். டெல்லியை எப்படிக் கையாளுவது என்று தங்கபாலுவுக்கு தெரியும். அந்த வித்தை எனக்குத் தெரியவில்லை என்ற ரீதியில் பேசினார்.
இதைப் பார்த்த கட்சியின் சீனியர்களோ, ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போதிய ஒத்துழைப்பு இல்லை என்று இவர் இஷ்டத்துக்கு தி.மு.க.வை விமர்சித்து அறிக்கைவிட்டார். அதை காங்கிரஸ் தலைமையின் கவனத்துக்கு தி.மு.க. கொண்டு போனதும், உடனே வருத்தம் தெரிவித்து அறிக்கை விடும்படி அங்கிருந்து உத்தரவு வந்தது. அழகிரி ரெடி பண்ணிய அறிக்கையையும் தி.மு.க. தலைமையிடம் காட்டி திருத்தம் செய்த பிறகுதான் வெளியிட்டதாக கூறப்படுகிறது. அந்த ஆதங்கத்தைத் தான் இந்தக் கூட்டத்தில் இப்படி கூறிவிட்டார் என்று சொல்கின்றனர்.