Skip to main content

“மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் யார்?’ - வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Published on 04/12/2024 | Edited on 04/12/2024
Announcement Who will be the next CM of Maharashtra  

மகாராஷ்டிராவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான மகாயுதி கூட்டணி கட்சிகள் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட அதிக இடங்களை பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. ஆனாலும், புதிய ஆட்சி அமைப்பில் குழப்பம் நிலவி வந்தது. அடுத்த முதல்வர் யார் என்று கேள்வி எழுந்த நிலையில், தனிப்பெரும் கட்சியாக பா.ஜ.க. வென்றதால், தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பதவியேற்க வேண்டும் என்று பா.ஜ.க. தரப்பில் கூறப்பட்டது. இதற்கிடையே, மகாயுதி கூட்டணி தலைவர்களான ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர்களான தேவேந்திர பட்னாவிஸ், அஜித் பவார் ஆகியோர் இணைந்து கடந்த நவம்பர் 26ஆம் தேதி  ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினர்.

மேலும், முதல்வராக இருந்த ஏக்நாத் ஷிண்டே, தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் வழங்கினார். இதன் மூலம், தேவேந்திர பட்னாவிஸ் தான் மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் ஆவார் என்ற எதிர்பார்க்கப்பட்டது. அதனை தொடர்ந்து, மகாயுதி கூட்டணியில் உள்ள மூன்று தலைவர்களும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து ஆலோசனை நடத்தினர். இருப்பினும் இந்த ஆலோசனையில் முடிவு எட்டப்படவில்லை என்று கூறப்பட்டது. இதனால் முதல்வர் பதவியேற்பு விழா தாமதமாகி வந்தது.

Announcement Who will be the next CM of Maharashtra

புதிய அரசில் ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வராக பொறுப்பேற்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில், ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வராக பதவியேற்க வாய்ப்பு இல்லை என்று சிவசேனா கட்சி தெரிவித்திருந்தது. இந்நிலையில் மகாராஷ்டிர பா.ஜ.க. சட்டமன்றக் கட்சிக் கூட்டம் மும்பையில் இன்று (04.12.2024) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் மாநில பார்வையாளர்கள், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் விஜய் ரூபானி ஆகியோர் கலந்து கொண்டனர். இதனையடுத்து மகாராஷ்டிர பாஜக சட்டமன்றக் கட்சியின் தலைவராக தேவேந்திர ஃபட்னாவிஸ் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் தேவேந்திர பட்னாவிஸ் நாளை (05.12.2024)  முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். 

சார்ந்த செய்திகள்