Skip to main content

“மக்கள் தக்க பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள்” - எடப்பாடி பழனிசாமி!

Published on 01/12/2024 | Edited on 01/12/2024
People will surely learn their lesson Edappadi Palaniswami

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கடந்த சில தினங்களாக விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இத்தகைய சூழலில் ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகில் நேற்று (30.11.2024) மாலை 5 மணி அளவில் கரையைக் கடக்க துவங்கியது. நேற்று இரவு 10.30 மணிக்கும் 11.30 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் கரையைக் கடந்துள்ளது. இது புதுச்சேரிக்கு அருகில் நிலை கொண்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி இது தொடர்ந்து மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து அடுத்த 3 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக் குறையக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதனையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொளத்தூருக்குச் சென்று அங்கு மேற்கொள்ளப்பட்டு மழை வெள்ள நிவாரண பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு வைப்பது வேலையாகப் போய்விட்டது. அதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. எங்கள் வேலையை நாங்கள் செய்து கொண்டிருந்தோம். எங்களைப் பொறுத்தவரை ஓட்டு வாக்களித்த மக்களுக்கு மட்டுமல்லாமல், வாக்களிக்காத மக்களுக்கும் சேர்த்துத் தான் பணிகளைச் செய்து கொண்டுள்ளோம். அதுதான் எங்களுடைய குறிக்கோள். எனவே எதிர்க்கட்சித்த தலைவருக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. அதற்கான தேவையும் இல்லை” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் சமுக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கொலை, கொள்ளை போன்ற சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளால் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. போதைப்பொருள் புழக்கம் தலைவிரித்து ஆடுகிறது. இதுமட்டுமன்றி ஆசிரியர்கள், மருத்துவர்கள், நெசவாளர்கள், போக்குவரத்து ஊழியர்கள், தொழில்துறையினர் என அனைத்து தரப்பினரும் தெருவில் இறங்கி போராடும் சூழலே உள்ளது.

‘குற்றச்சாட்டு வைப்பதே எனக்கு வேலையாக போய்விட்டது’  என்று கூறும் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களே திமுக ஆட்சியின் அவல நிலையை சுட்டிக்காட்ட வேண்டியது எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் என்னுடைய கடமை. அதற்கு முறையான நடவடிக்கை எடுத்து செயல்படுத்துவது அரசின் கடமை. அதை செய்யாத, ஒரு முதலமைச்சரிடம் இப்படிப்பட்ட மடைமாற்றும் பதிலைத்தான் எதிர்பார்க்க முடியும். திமுகவிடம் நாகரிகத்தையோ, மக்கள் மீதான அக்கறையோ எதிர்பார்க்க முடியாது தான் என்றாலும், முதல்வர் மு.க. ஸ்டாலினின் சமீபத்திய தரக்குறைவான பேச்சுகளே அதற்கான மிகப்பெரிய சான்றாக அமைகிறது. முதலமைச்சர் முடிந்தால் மக்கள் பணி செய்யுங்கள். இல்லையேல், நிர்வாகத் திறனில்லை என்று ஒப்புக்கொள்ளுங்கள். ஆட்சி இருக்கிறது என்ற ஆணவச் செருக்கில் நீங்கள் பேசும் பேச்சிற்கு மக்கள் தக்க பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்