தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக தமிழக முதல்வர் சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலுவும் அண்ணாமலை மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
அண்மையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட திமுக நிர்வாகிகளின் சொத்துப்பட்டியல் அடிப்படை ஆதாரமற்ற பொய் குற்றச்சாட்டு என திமுகவினர் தெரிவித்து வந்தனர். திமுகவின் தலைமை சார்பாக ஆர்.எஸ்.பாரதி மற்றும் தனிப்பட்ட முறையில் அமைச்சர் உதயநிதி, எம்.பி கனிமொழி, டி.ஆர்.பாலு ஆகியோர் '48 மணி நேரத்திற்குள் அண்ணாமலை மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அவதூறு வழக்கு தொடரப்படும்' என அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தனர்.
தொடர்ந்து கடந்த 10 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் அரசு வழக்கறிஞர் ஜி.தேவராஜன், 'அண்ணாமலை கூறிய கருத்துகள் பொய்யானது. அடிப்படை ஆதாரமற்றது. இது முழுக்க முழுக்க முதல்வரின் நற்பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள். தமிழக முதல்வர் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் கருத்துகளை வெளியிட்ட அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை மீது திமுக நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றக் குழு தலைவருமான டி.ஆர்.பாலு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 17வது நீதித்துறை நடுவர் அனிதா ஆனந்த்திடம் அவதூறு வழக்கு தொடர்பான மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அடிப்படை ஆதாரம் இன்றி தன்னை பற்றி அவதூறு கருத்துக்களை அண்ணாமலை கூறியதாக அந்த மனுவில் டி.ஆர்.பாலு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.