![Rajendra Balaji, spoke sentimentally about jayalalitha](http://image.nakkheeran.in/cdn/farfuture/hegx8CseASK-POfMp28ib9d8znjRV5zZEwgygVVhHiU/1617174967/sites/default/files/inline-images/th-1_895.jpg)
தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகின்ற 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பிலும் பிரச்சாரத்திலும் ஈடுபட்டு வருகின்றன. அதுமட்டுமின்றி கட்சியினருடன் ஆலோசனை கூட்டங்களும் நடத்திவருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், அதிமுக - கூட்டணி கட்சியினருடனான மண்டல பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கலந்துகொண்டார். அப்போது அவர், “தேர்தல் களத்தில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பம்பரமாக செயல்பட்டு வருகிறீர்கள். கட்சிக்காக தன்னுடைய உடல்நிலையைக்கூட கருத்தில் கொள்ளாமல் ஜெயலலிதா பணியாற்றினார். அவரின் எண்ணம் எல்லா தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றிபெற வேண்டும் என்பதுதான்.
ஜெயலலிதாவின் ஆன்மா சாந்தி அடைய வேண்டும் என்றால், தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சியே அமைய வேண்டும். (இதனை பேசியபோது ராஜேந்திரபாலாஜி கண் கலங்கினார்) அடிமட்ட தொண்டனுக்கும் பதவி வழங்கி அழகு பார்ப்பது அதிமுக மட்டும்தான். ஏழை மக்களுக்கு உதவி செய்வதில் ஜெயலலிதாதான் முதன்மையானவர். தற்போது ஜெயலலிதா நம்மோடு இல்லை என்று யாரும் நினைக்க வேண்டாம். அவர் நம் எல்லோருடைய இதயத்திலும் வாழ்ந்து வருகிறார்” என்று பேசினார்.