சொத்துக்குவிப்பு வழக்கில், சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய நான்கு பேருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4 வருடம் சிறை தண்டனை விதித்தது கடந்த 2017 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதையடுத்து மூவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா தற்போது 3 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறைவு செய்துள்ளார். இன்னும் ஒரு ஆண்டு மட்டுமே தண்டனை உள்ளது என்கின்றனர்.
இந்த நிலையில், சென்னை இராயப்பேட்டையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலம் கடந்த வாரம் திறந்து வைக்கப்பட்டது. அப்போது அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், வருகிற சட்டமன்ற தேர்தலில் அமமுக தலைமையில் பெரிய கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்க இருப்பதாகக் கூறினார். மேலும் அடுத்த சட்டமன்ற தேர்தலுக்குள் சசிகலா சிறையிலிருந்து விடுதலையாவார் என்றும், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் எனவும் கூறினார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுகவின் புகழேந்தி பேசியுள்ளார். அதாவது, சசிகலா சிறையில் இருந்து வந்தால் எந்த மாற்றமும் ஏற்பட வாய்ப்பில்லை. தினகரன் சசிகலாவை பிளாக் மெயில் செய்கிறார். சிறையில் சசிகலாவை யாரையும் சந்திக்க விடுவதில்லை. தினகரன் ஒரு ஃபிராடு. சசிகலாவின் பணத்தைக் கொள்ளையடிக்க டிராமா செய்து வருகிறார். சிறையில் இருந்து வெளிவரும் சசிகலா நிச்சயம் அரசியலுக்கு வரமாட்டார். நேராக வீட்டுக்குச் செல்வார். தினகரன் பசுத்தோல் போர்த்திய புலி. அவருக்கு சசிகலாவை வெளியே அழைத்துவரும் எண்ணமில்லை என்று கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.