கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் வரும் மே மாதம் 10 ஆம் தேதி நடைபெறுகிறது. கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டமன்றத் தொகுதிகள் உள்ள நிலையில், இழந்த ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸும், இருக்கும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் முனைப்பில் பாஜகவும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் அதிமுகவின் ஓபிஎஸ் அணி சார்பில் கர்நாடகாவில் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் கர்நாடக அதிமுக நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் அணியை சேர்ந்த புகழேந்தி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
கர்நாடக மாநில அதிமுக சார்பில் கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் குறித்த ஆலோசனை செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. மாநில கழக செயலாளர் குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அவைத் தலைவர் ஏ.ஆனந்தராஜ், பொருளாளர் மனோகர், இணைச்செயலாளர் வசந்த ராணி, துணைச் செயலாளர் அனிதா, மாவட்ட கழக செயலாளர் முனிரத்தினம், தொகுதி செயலாளர்கள் கிருஷ்ணா, பரசுராமன், இஸ்ரேல், பங்காரு பேட்டை ரங்கசாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் நடராஜ், சண்முகம், ரவி, அண்ணா தொழிற்சங்க பேரவை மாநிலச் செயலாளர் எஸ்.ரவி, கோலார் மாவட்ட கழக செயலாளர் சாயி இன் ஷா, காந்திநகர் தொகுதி அவை தலைவர் பாண்டு உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவை ஒட்டி அலங்கரிக்கப்பட்ட அவரது திருவுருவப்படத்திற்குக் கழக கொள்கை பரப்பு செயலாளர் வா.புகழேந்தி மற்றும் நிர்வாகிகள் மலர் தூவி மாலை அணிவித்தனர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் கூட்டணியில் இணைந்து போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டால் கோலார் தங்க வயல், காந்திநகர், பங்காரு பேட் போன்ற தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுவது என்கிற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் ஓபிஎஸ்ஸிடம்சமர்ப்பித்து அனுமதி பெறப்படுகிறது என தீர்மானிக்கப்பட்டது.
தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் வா.புகழேந்தி பேசும்போது,''கோலார் தங்கவேல் காந்திநகர் போன்ற இடங்களில் தனித்து நின்று ஜெயலலிதா ஆணைக்கிணங்க தொடர் வெற்றிகளை பெற்றிருக்கிறோம். ஆகவே இந்த தேர்தலிலும் ஓபிஎஸ் அனுமதித்தால் போட்டியிடத் தயார். தேர்தல் ஆணையத்தில் ஒருங்கிணைப்பாளராக அவர் இருப்பதால் அவர்தான் ஏ, பி பாரங்களை வழங்க வேண்டும். இரட்டை இலை எங்களுக்குதான் கிடைக்கும். ஓபிஎஸ் நிர்வாகிகளை அறிவித்த பின்னர் இந்த மண்டபத்தில் இவ்வளவு பெரிய கூட்டத்தைப் பார்க்க முடிகிறது. மீண்டும் கர்நாடகா கழகம் எழுச்சி பெற்றுள்ளது'' என்றார்.
முன்னதாக ஓபிஎஸ் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து அறிவித்தமைக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. 24 ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் மாநாட்டிற்கு கர்நாடகத்திலிருந்து நூற்றுக்கணக்கானோர் செல்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.