
இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவராக பா.ஜ.க. எம்.பி. பிரிஜ்பூஷண் சரண் சிங் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், சரண் சிங் மற்றும் தேசியப் பயிற்சி முகாமில் உள்ள பயிற்சியாளர்கள், நடுவர்கள் ஆகியோர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் குற்றம் சாட்டியிருந்தார். இதையடுத்து டெல்லி போலீசார் கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி பாஜக எம்.பி பிரிஜ்பூஷண் சரண் சிங் மீது இரண்டு வழக்குகள் பதிந்தனர். அதில் பாலியல் துன்புறுத்தல் (354 ஏ) பின்தொடர்தல் (354 டி), பாலியல் ரீதியாகப் பலவந்தப்படுத்துதல் (354) என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டன. மேலும் ஒரு வழக்கில் 18 வயதுக்குட்பட்ட வீராங்கனை சுமத்திய குற்றச்சாட்டு என்பதால் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது.
இந்த விவகாரத்தில் பிரிஜ் பூஷண் சரண் சிங்கை கைது செய்யவும், பதவி நீக்கம் செய்யவும் வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை வீரர்கள் நடத்தினார்கள். பின் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், வீரர்களுடன் கடந்த ஜூன் மாதம் 8 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தி, அடுத்த 15 ஆம் தேதிக்குள் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். அதன் பின் வீரர்கள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து ஜூன் மாதம் 15 ஆம் தேதி அன்று பாஜக எம்.பி பிரிஜ் பூஷணுக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷிரின்டே டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “மல்யுத்த வீராங்கனைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் விவகாரம் குறித்து பிரதமர் மோடி மெளனம் காப்பது ஏன்? பிரதமர் மோடி பிரிஜ் பூஷணை எப்போது பா.ஜ.க கட்சியிலிருந்து வெளியேற்றுவார்? பிரிஜ் பூஷண் எப்போது கைது செய்யப்படுவார்? பிரிஜ் பூஷணுக்கு பாதுகாப்பு மற்றும் ஆதரவு தருவதை பா.ஜ.க அரசு எப்போது நிறுத்தும்? இதனால், இந்தியாவில் இருக்கும் மகள்களிடம் இருந்து மோடியும் அவரது அரசும் சோதனையை எதிர்கொண்டுள்ளார்கள்” என்று கூறினார்.