Skip to main content

மத்திய அமைச்சரின் பதிவு... மன்னிப்பு கோரிய வாட்ஸ்ஆப் நிறுவனம்

Published on 01/01/2023 | Edited on 01/01/2023

 

WhatsApp has apologized for the Indian map issue

 

புத்தாண்டை முன்னிட்டு வாட்ஸ்ஆப் நிறுவனம் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தது. அந்த வீடியோவில் இடம்பெற்ற உலக வரைபடத்தில் இந்தியாவில் உள்ள ஜம்மு-காஷ்மீர் பகுதி பாதி மறைக்கப்பட்டிருந்தது. 

 

இதனைச் சுட்டிக்காட்டி மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், “இந்த வீடியோவில் இந்திய வரைபடம் தவறாக உள்ளது. இதை வாட்ஸ்ஆப் நிறுவனம் விரைவில் சரி செய்ய வேண்டும். இந்தியாவில் வர்த்தகத்தைத் தொடர வேண்டும் என்றால், அனைத்து விதமான நிறுவனங்களும் இந்திய வரைபடத்தைச் சரியாகக் குறிப்பிட வேண்டும்.” என்று கூறியிருந்தார். 

 

அமைச்சரின் இந்தப் பதிவைத் தொடர்ந்து வாட்ஸ்ஆப் நிறுவனம், அந்த வீடியோவை ட்விட்டரில் இருந்து நீக்கியது. மேலும், “எதிர்பாராமல் தவறு நடந்துவிட்டது. எங்களை மன்னிக்கவும். தவறை சுட்டிக்காட்டியதற்கு நன்றி. வீடியோவை நீக்கிவிட்டோம். இனிவரும் காலங்களில் கவனத்தோடு செயல்படுவோம்.” என்று பதிலளித்துள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இதை செய்ய சொன்னால் இந்தியாவை விட்டு வெளியேறுவோம்” - வாட்ஸ் அப் எச்சரிக்கை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 WhatsApp warning May have to leave India

உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் உபயோகிக்கும் செயலி தான் வாட்ஸ் அப். இந்த செயலி மூலம், தகவல்களை பரிமாறவும், இணைய சேவை மூலம் எந்தவித கட்டணமுமின்றி வீடியோ கால், ஆடியோ கால் போன்றவற்றை பயன்படுத்தவும் முடியும். மேலும், புகைப்படங்கள், வீடியோக்கள், ஸ்டிக்கர்கள் என அனைத்து விதமான பரிமாற்றங்களையும் இந்த செயலி மூலம் அனுப்பக்கூடிய வசதிகள் உண்டு. இந்த செயலியை உபயோகிக்காத மக்கள் மிகவும் சொற்பமாக தான் இருக்க முடியும் என்றுதான் கூற வேண்டும். 

இதற்கிடையில் வாட்ஸ் அப் பயனர்களின் வசதிகளுக்கு ஏற்றவாறு வாட்ஸ் அப் நிறுவனம் அவ்வப்போது புதிய அப்டேட்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், இந்த செயலி மூலம் பயனர் ஒருவருக்கு அனுப்பும் செய்திகளை மூன்றாம் நபர்கள் பார்க்க முடியாதவாறு எண்டு டு எண்டு என்கிரிப்ஷன் ( End to End Encryption) முறையை கொண்டு வந்தது. இதனைப் பயன்படுத்தி பயனர்கள், தாங்கள் அனுப்பும் செய்திகளை பாதுகாத்து கொள்ளலாம். இதனால், தனிப்பட்ட ஒருவரின் செய்திகள் பாதுகாக்கப்படும் என்று கூறப்படுகிறது. 

இந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப சட்டங்களில் மத்திய அரசு புதிய மாற்றத்தை கொண்டு வந்தது. மத்திய அரசு கொண்டு வந்த அந்த சட்டத்தில் கூறியதாவது, போலி செய்திகளையும், நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் தவறான செய்தி பகிர்வுகளை கண்டறிய வேண்டும். இதனால், வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற செய்தி பகிர்வு செயலி வாயிலாக பகிரப்படும் அனைத்து செய்திகளும் சேமிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டது.

இதனை எதிர்த்து வாட்ஸ் அப், பேஸ் புக் ஆகிய நிறுவனங்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பான வழக்கு நேற்று (25-04-24) டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், ‘வாட்ஸ் அப் எண்டு டு எண்ட் என்கிரிப்ஷன் காரணமாக போலி செய்திகளை கண்டறிவதில் சிக்கல் ஏற்படுகிறது. மேலும், இது போலி செய்திகளால் நாட்டில் நிலவும் அமைதி மற்றும் ஒற்றுமையை சீர்குலைத்துவிடும்’ என வாதிட்டார். 

இதனையடுத்து, வாட்ஸ் அப் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தேஜஸ் காரியா, “இந்த சட்டத்தை அமல்படுத்துவதால் நாங்கள் ஒரு முழுமையான சங்கிலியை வைத்திருக்க வேண்டும். மேலும், மில்லியன் கணக்கான செய்திகளை பல ஆண்டுகளாக சேமிக்க வேண்டும் நிலை உருவாகும். உலகில் எந்த நாட்டிலும் இது போன்ற சட்டங்கள் இல்லை.  இது போன்ற சட்டங்களை கொண்டு வந்து  என்கிரிப்ஷனை எடுக்க சொன்னால் வாட்ஸ்அப் இந்தியாவை விட்டு செல்ல வேண்டி இருக்கும்” எனத் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், இது தொடர்பான வழக்கை ஒத்திவைத்தனர். 

Next Story

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்; இந்தியா வெளியிட்ட அறிக்கை!

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
India is of the opinion that peace should return to the Israel-Iran issue

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படை மூத்த தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில் தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. ஆனால் ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிரியா, லெபனான் எல்லை பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் ஈரான் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது.  ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புதுறை தெரிவித்துள்ளது. இதனிடையே ஈரான் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் வெளியுறவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரேல், ஈரான் மோதல் விவகாரத்தில் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இரு நாடுகளிலும் உள்ள இந்தியர்களுடன் தூதரகங்கள் நெருங்கிய தொடர்பில் உள்ளன. இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் ஏற்பட்டது குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது. உடனடியாக மோதலை நிறுத்தி, வன்முறையை கைவிட்டு அமைதிக்குத் திரும்ப வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.