பீகார் மாநிலத்தில் நடத்தப்பட்ட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு விபரங்களை அம்மாநில அரசு கடந்த 02.10.2023 அன்று வெளியிட்டது. வெளியிட்ட சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பீகார் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 13 கோடியே 7 லட்சத்து 25 ஆயிரத்து 310 பேர் ஆவர். இவர்களில் 2 கோடியே 2 லட்சத்து 91 ஆயிரத்து 679 பேர் பொதுப் பிரிவினர் (GEN) ஆவர். இது மொத்த மக்கள் தொகையில் 15.52% ஆகும். 3 கோடியே 54 லட்சத்து 63 ஆயிரத்து 936 பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பை (BC) சேர்ந்தவர்கள். இது மொத்த மக்கள் தொகையில் 27.12% ஆகும்.
மேலும் 4 கோடியே 70 லட்சத்து 80 ஆயிரத்து 514 பேர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் (EBC) ஆவர். இது மொத்த மக்கள் தொகையில் 36.01% ஆகும். 2 கோடியே 56 லட்சத்து 89 ஆயிரத்து 820 பேர் (SC) பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இது மொத்த மக்கள் தொகையில் 19.65% ஆகும். 21 லட்சத்து 99 ஆயிரத்து 361 பேர் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் (ST) ஆவர். இது மொத்த மக்கள் தொகையில் 1.68% ஆகும். இப்படியாக பீகார் மாநில அரசு நாட்டிலேயே முதன் முறையாக சாதிவாரியான கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட்டுள்ளது.
பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் மாநிலங்களிலும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும், சிலர் நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தல்களை வைத்து வருகின்றனர். தமிழகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சாதிவாரி கணக்கெடுப்பை தமிழக அரசு நடத்த வேண்டும் என்ற வலியுறுத்தலை வைத்துள்ளார். இந்நிலையில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த ராஜஸ்தான் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ராஜஸ்தானில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் பீகாரை தொடர்ந்து இரண்டாவது மாநிலமாக ராஜஸ்தான் மாநிலம் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த உள்ளது.