
ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “முதல்முறையாக தேர்தல் நேரத்தில் பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர், நிதி அமைச்சர் ஆகியோர் பங்குச் சந்தை குறித்து கருத்து தெரிவித்ததைக் குறிப்பிட்டோம். பங்குச்சந்தை அசுர வேகத்தில் உயர்ந்து வருகிறது என்று பிரதமர் கூறினார். ஜூன் 4 ஆம் தேதி பங்குச் சந்தை உயரும் என்றும், நீங்கள் அனைவரும் முதலீடு செய்ய வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் கூறினார், இதேபோல் நிதியமைச்சர் கூறினார். பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் ஐந்து கோடி குடும்பங்களுக்கு பிரதமரும் மத்திய உள்துறை அமைச்சரும் குறிப்பிட்ட முதலீட்டு ஆலோசனையை வழங்கியது ஏன்?.

இது அதானி பிரச்சினையை விட பரந்த பிரச்சினை. இது அதானி பிரச்சினையுடன் இணைக்கப்பட்டுள்ளது. யார் சில்லறை முதலீட்டாளர்களுக்கு பங்குகளை வாங்க அறிவுறுத்துகிறார்கள். இதற்கு முன் இப்படி நடந்ததில்லை. பங்குச் சந்தை குறித்து பிரதமர் இதற்கு முன் கருத்து தெரிவித்ததில்லை. பங்குச் சந்தை ஏற்றம் அடையப் போகிறது என்று ஒன்றன் பின் ஒன்றாக பிரதமர் மிகவும் சுவாரஸ்யமாகவும், பலமுறை கருத்துக் கூறுவது இதுவே முதல் முறை. அதே சமயம், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் (exit poll - எக்ஸிட் போல்கள்) தவறானவை என்ற தகவலும் அவரிடம் உள்ளது ” எனத் தெரிவித்தார்.