
நாட்டின் 75- வது சுதந்திர தினத்தையொட்டி, தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சுதந்திர தின விழா நடைபெறும் செங்கோட்டை பகுதியில் மட்டும் சுமார் 10,000 காவல்துறையினர், பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், செங்கோட்டை பகுதியைச் சுற்றி 1,000- க்கும் மேற்பட்ட அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மக்கள் கூடும் பகுதிகளிலும் காவல்துறையினர் குவிக்கப்பட்டு, கண்காணிப்புத் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பலூன் மற்றும் பட்டங்கள் மூலமாக அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க, சிறப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த வாரத்தில் பாதுகாப்பு ஒத்திகை நடத்த டெல்லி காவல்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, சென்னை, கொல்கத்தா, மும்பை, கொச்சி, டெல்லி, பெங்களூரு, அமிர்தசரஸ் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச விமான நிலையங்களில் ஐந்தடுக்கு பாதுகாப்புப் போடப்பட்டு, கண்காணிப்புத் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.