உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே உள்ள சில்க்யாரா என்ற பகுதியில் அமைந்துள்ள யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்று வந்தது. இந்த சூழலில் கடந்த 12 ஆம் தேதி (12/11/2023) காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென எதிர்பாராத விதமாகச் சுரங்கப்பாதை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பணியில் இருந்த 41 தொழிலாளர்கள் சுரங்கத்தின் உள்ளே சிக்கினர். சுமார் 4.5 கி.மீ. நீளமுள்ள சுரங்கப் பாதையில் 150 மீட்டர் இடிந்து விழுந்து இந்த விபத்து நிகழ்ந்தது.
மீட்புப் பணிகளில் 14வது நாளாகத் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகள், தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். சுரங்கப்பாதை விபத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றும் முயற்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களும் நேற்று முன்தினம் பிற்பகலுக்குள் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்க சுரங்கத்தைத் துளையிடும் பணியின்போது ஆகர் இயந்திரத்தைத் தாங்கிக் கொண்டிருந்த கான்கிரீட் தளம் சேதமடைந்ததால் மீட்புப் பணியில் மீண்டும் தொய்வு ஏற்பட்டது. துளையிடும் பகுதியில் இரும்புக் கம்பி இருப்பதால் துளையிடுவதில் சிக்கல் ஏற்பட்டு மீட்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
இந்நிலையில் மீட்புக் குழுவினர் சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மாற்று வழியில் மீட்கத் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். ஆகர் இயந்திரத்தைக் கொண்டு துளையிடும் பணியில் தொடர்ந்து இடையூறு ஏற்பட்டுக் கொண்டே இருப்பதால், மாற்று வழியில் தொழிலாளர்களை மீட்பது குறித்து மீட்புக் குழுவினர் ஆலோசனை மேற்கொண்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சுரங்கப்பாதை உள்ள மலையின் மேலே இருந்து கீழ்ப்பகுதி வரை செங்குத்தாகத் துளையிட்டு மீட்புப் பணியைத் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மலை மீது செல்வதற்காக புதிய பாதைகள் அமைக்கும் பணிக்காக நூற்றுக்கணக்கான ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.