தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நவம்பர் 7 ஆம் தேதி தொடங்கி, நவம்பர் 30 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
இந்த ஐந்து மாநிலங்களில் ஒன்றான சத்தீஸ்கரில் முதல் கட்ட வாக்குப்பதிவுக்கான வேட்பு மனுத்தாக்கல் 13.10.2023 அன்று தொடங்கியது. அதே சமயம் சத்தீஸ்கரில் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவுக்கான வேட்புமனு தாக்கல் 21.10.2023 அன்று தொடங்கியது. மேலும் மிசோரத்தில் நவம்பர் 7 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் 13.10.2023 அன்று தொடங்கியது. இதற்கான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3 ஆம் தேதி நடைபெறுகிறது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மிசோரமில் மொத்தமுள்ள 40 தொகுதிக்கு ஒரே கட்டமாகவும், சட்டீஸ்கரில் மொத்தமுள்ள 90 தொகுதியில் முதற்கட்டமாக 20 தொகுதிக்கும் நாளை மறுநாள் (07.11.2023) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனையொட்டி அனல் பறந்த தேர்தல் பிரச்சாரம் இன்று (05.11.2023) மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. சட்டீஸ்கரில் பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. உள்ளிட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அதே சமயம் மிசோரமில் மட்டும் பிரதமர் மோடி வீடியோ வெளியிட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பிரதமர் மோடியுடன் ஒரே மேடையில் பிரச்சாரத்தில் பங்கேற்க மாட்டேன் என மிசோரம் முதல்வர் ஜோரம் தங்கா மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.