மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கடந்த 20ஆம் தேதி (20.11.2024) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில், ஆளும் மகா யுதி கூட்டணி அரசான பா.ஜ.க - சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே பிரிவு), அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி மீண்டும் கூட்டணியோடு இந்த தேர்தலை சந்தித்தது. அதே போல், இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி, உத்தவ் தாக்கரேவின் சிவசேனா ஆகிய மகா விகாஸ் அகாடி கூட்டணி கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டது.
மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க 145 இடங்கள் தேவை என்ற பட்சத்தில், இன்று (23-11-240 காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில், பா.ஜ.க தலைமையிலான மகாயுதி கூட்டணி கட்சிகள் 231 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி 51 இடங்களில் மட்டுமே முன்னிலை வருகிறது. அதிலும் குறிப்பாக, பா.ஜ.க 78 இடங்களில் வெற்றி பெற்றும் 55 இடங்களில் முன்னிலை வகித்தும் வருகிறது. ஏக்நாத் ஷிண்டேவின் சிவ சேனா 37 இடங்களில் வெற்றி பெற்றும் 20 இடங்களில் முன்னிலை வகித்தும் வருகிறது. அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 32 இடங்களில் வெற்றி பெற்றும், 9 இடங்களில் முன்னிலை வகித்தும் வருகிறது.
அதே போல், மகா விகாஸ் அகாடி கூட்டணியில் காங்கிரஸ் 15 இடங்களிலும், உத்தவ் தாக்கரேவின் சிவ சேனா 20 இடங்களிலும், சரத் பவாரின் சரத்சந்திர பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சி 10 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. பெரும்பான்மைக்கு தேவையான அதிக இடங்களை கைப்பற்றியுள்ள பா.ஜ.க தலைமையிலான மகா யுதி கூட்டணி மகாராஷ்டிராவில் ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. அதே சூழ்நிலையில், அம்மாநிலத்தில் அடுத்த முதல்வர் யார் என்று கேள்வியும் எழுந்துள்ளது. மகாராஷ்டிராவின் தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறியிருந்ததாவது, ‘இறுதி முடிவுகள் வரட்டும். அதன் பிறகு, நாங்கள் ஒன்றாகத் தேர்தலில் போட்டியிட்டது போல், மூன்று கட்சிகளும் ஒன்றாக அமர்ந்து யார் முதல்வர் என்பது குறித்து முடிவெடுப்போம்’ என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்விக்கு, பா.ஜ.க மூத்த தலைவரும் அம்மாநில துணை முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸ் பதில் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “அனைவரும் கலந்து ஆலோசித்த பிறகே முதலமைச்சரை தேர்வு செய்ய வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார். முதல்வர் யார் என்பதில் எந்த பிரச்சனையும் இல்லை. தேர்தலுக்குப் பின், மூன்று கட்சித் தலைவர்களும் ஒன்றாக அமர்ந்து, இதை முடிவு செய்வது என, முதல் நாளிலேயே முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவு அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும், இதில் எந்த பிரச்சனையும் இல்லை” என்று தெரிவித்தார்.