மாயமான சுற்றுசூழல் ஆர்வலரான முகிலனை கண்டுபிடிக்க இதுவரை என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது என்பது குறித்து உடனடியாக விளக்க அறிக்கை அளிக்குமாறு இந்திய அரசுக்கு ஐ.நா. மனித உரிமை கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய ஈரோட்டை சேர்ந்த முகிலன் கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து ஆவணப்படம் ஒன்றை சென்னையில் வெளியிட்டார். இதனையடுத்து அதற்கு அடுத்தநாள் இரவே எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து மதுரை செல்ல வந்தவர் திடீரென மாயமானார்.
அதன்பின் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்காத நிலையில் பொதுமக்கள் சமூகவலைத்தளங்கள் மூலம் முகிலனை கண்டுபிடிக்க தொடர் கோரிக்கை வைத்தனர். வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
முகிலன் மாயமாகி 4 மாதங்கள் ஆகியும் அவரை கண்டுபிடிக்க முடியாத நிலையே உள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிக்குமாறு, மத்திய அரசுக்கு ஸ்விட்சர்லாந்தை தலைமை இடமாக கொண்டு செயல்படும் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
மேலும் முகிலன் சமாதி ஆகிவிட்டதாக சமுக வலைதளத்தில் ராஜபாளையம் காவல் நிலை ஆய்வாளர் பதிவிட்டது குறித்து விசாரணை நடத்தப்பட்டதா என்றும் அவ்வாறு விசாரணை நடத்தப்பட்டு இருந்தால் அது குறித்த விவரங்களை அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. விசாரணை நடத்தப்படாமல் இருந்தால் அதற்கான காரணத்தை விளக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.