கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பிச்சைக்காரர்களும் வாக்குரிமை பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கர்நாடக மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையில் 5% பேர் பிச்சைக்காரர்களாக இருக்கின்றனர். இவர்களில் பலருக்கு இன்னமும் வாக்குரிமை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அனைத்திந்திய ஊரக ஒருமைப்பாட்டு ஜனநாயக தூதர் என்ற அமைப்பு, பிச்சைக்காரர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கும் வாக்குரிமை அளிக்கவேண்டும். இல்லையெனில், ஒட்டுமொத்த தேர்தல் பணிகளையும் நிறுத்தவேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியுள்ளது.
இதே கோரிக்கையை இந்த அமைப்பு மங்களூரு காவல்துறை இணை ஆணையர் சஷிகாந்த் செந்திலிடமும் முன்வைத்துள்ளது. இதுகுறித்து செந்தில், ‘நாங்கள் ஆதரவற்ற மற்றும் மறுவாழ்வு மையங்களில் வசித்து வரும் பிச்சைக்காரர்களின் விவரங்களை சேகரித்து வருகிறோம். அந்த பணிகள் முடிந்ததும் அவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும்’ என தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தல் வரும் மே 12ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.