
இந்தியாவை சேர்ந்த பெண் ஒருவருக்கு அபுதாபியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பண்டா மாவட்டத்தை சேர்ந்தவர் ஷாஜாதி கான்(33). வீட்டு வேலைக்காக கடந்த 2021 ஆம் ஆண்டு அபுதாபிக்கு சென்ற ஷாஜாதி கான், ஒருவரின் வீட்டில் பணிச் செய்து வந்தார். அப்போது கடந்த 2022 ஆம் ஆண்டு வீட்டின் உரிமையாளரின் மனைவிக்கு குழந்தை பிறந்துள்ளது. அதனையொட்டி, ஷாஜாதி கான் வீட்டு வேலையுடன் சேர்த்து குழந்தையை பராமரிக்கும் பணியையும் மேற்கொண்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 7 ஆம் தேதி குழந்தைக்கு வழக்கமாக செலுத்தப்படும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஆனால் அன்று மாலையே குழந்தை உயிரிழந்தது. குழந்தை உயிரிழந்ததற்கு ஷாஜாதி கான் தான் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது. அதன்பேரில் அவர் மீது கொலை வழக்குப் பதியப்பட்டு, அபுதாபி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கு அபுதாபி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் ஷாஜாதிகான், தான் குற்றத்தை ஒப்புக்கொண்டு வீடியோ ஒன்றையும் வெளியிட்டார். அதனையேற்றுக் கொண்ட அபுதாபி நீதிமன்றம், ஷாஜாதி கானை குற்றவாளி என அறிவித்து, கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அவருக்கு நாட்டின் உச்சபட்ச தண்டனையான மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. ஆனால், கருணையின் அடிப்படையில் தனக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என்று ஷாஜாதி கான் தரப்பில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அபுதாபி நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்து தண்டனையை உறுதி செய்து உத்தரவு பிறப்பித்தது.
ஷாஜாதி கானின் கடைசி ஆசை குறித்து கேட்க, தனது நிலை குறித்து தன்னுடைய தந்தை ஷபீர் கானுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். அதன்பிறகு சிறைத்துறை அதிகாரிகளின் அனுமதியுடன் கடந்த மாதம் 14 ஆம் தேதி உத்தரப்பிரதேசத்தில் இருக்கும் தந்தை ஷபீர் கானிடம் தொலைப்பேசியில் பேசிய ஷாஜாதி கான் தனது மரண தண்டனை குறித்து விவரித்துள்ளார். மேலும், ‘இதுதான் நான் உங்களுடன் பேசும் கடைசி உரையாடலாக இருக்கும்..’ என்று கண்ணீர் மல்க கதறியுள்ளார். அதன்பிறகு இணைப்பை துண்டித்துள்ளார். அதன்பிறகு மகளிடம் இருந்து எந்த தகவலும் வராததால், ஷாஜாதிகானின் தற்போதைய நிலை குறித்து தெரிய வேண்டும் என்று ஷபீர் கான் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை நேற்று(3.3.2026) நடந்தபோது, மனுதாரர் தரப்பில், ஷாஜாதி கான் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு, கடந்த 15 ஆம் தேதியே ஷாஜாதி கானுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும் அபுதாபியில் வரும் 5ஆம் தேதி(நாளை) ஷாஜாதி கானின் இறுதிச்சடங்கு நிகழ்வு நடைபெற இருப்பதாகவும், அதற்கு அவரது பெற்றோரை பங்கேற்க வைப்பதற்காக தூதரக அதிகாரிகள் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதே சமயம் தனது மகளை காப்பாற்ற இந்தியா சார்பில் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என்று ஷபீர் கான் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டினார். ஆனால் இதனை மறுத்த அரசு தரப்பு, ஷாஜாதி கானை காப்பாற்ற இந்தியா தூதரக அதிகாரிகள் மூலம் பல முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் அபுதாபியில் குழந்தைகளுக்கு எதிரான கொலைகள் கடும் குற்றமாக கருதப்படுவதால் ஷாஜாதி கானை காப்பாற்ற முடியவில்லை என்று தெரிவித்தது.