
மகாராஷ்டிராவில், பா.ஜ.க தலைமையிலான மகாயுதி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில், பா.ஜ.க தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகப் பதவி வகித்து வருகிறார். கூட்டணிக் கட்சித் தலைவர்களான சிவசேனா கட்சித் தலைவர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் ஆகியோர் துணை முதல்வர்களாகப் பதவி வகித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தேவேந்திர பட்னாவிஸ் அமைச்சரவையில் இருக்கும் தேசியவாத காங்கிரஸ் அமைச்சர் ஒருவர் திடீரென்று ராஜினாமா செய்துள்ளார். கடந்தாண்டு டிசம்பர் மாதம் மகாராஷ்டிடாவின் பீட் மாவட்டத்தில் உள்ள மசோஜோக் கிராமத்தின் தலைவராக இருந்த சந்தோஷ் தேஷ்முக் என்பவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்பாக மகாராஷ்டிரா மாநில சிஐடி விசாரணை நடத்தி வந்தது.
அதன்படி, கடந்த பிப்ரவரி மாதம் மகாராஷ்டிரா மாநில சிஐடி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அந்த குற்றப்பத்திரிகையில், மகாராஷ்டிரா மாநில உணவு மற்றும் சிவில் சப்ளை அமைச்சராக இருக்கும் தனஞ்சய் முண்டேவின் உதவியாளர் வால்மிக் கரட் உட்பட 8 பேர் இடம் பெற்றது. இந்த விவகாரம் மகாராஷ்டிரா அரசியலில் பெரும் பூதாகரமானது. மேலும், மகாராஷ்டிரா மாநில அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான தனஞ்சய் முண்டேவை ராஜினாமா செய்யுமாறு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். சட்டமன்றத்தில், இந்த குரல் ஒலித்தது.
இதற்கிடையில், சந்தோஷ் தேஷ்முக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு இருந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் நேற்று (03-03-25) வெளியாகி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தனஞ்சய் முண்டே தனது அமைச்சர் ராஜினாமா செய்வதாகக் கூறி தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸிடம் சமர்பித்தார். அந்த கடிதம், தற்போது மகாராஷ்டிரா ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய தனஞ்சய் முண்டே, “ உடல்நலக் காரணங்களுக்காக நான் பதவி விலகுகிறேன். பீட் மாவட்டத்தில் உள்ள மசாஜோக்கைச் சேர்ந்த மறைந்த சந்தோஷ் தேஷ்முக் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதே முதல் நாளிலிருந்தே எனது உறுதியான கோரிக்கையாகும். நேற்று வெளிச்சத்திற்கு வந்த புகைப்படங்களைப் பார்த்து, நான் மிகவும் வேதனையடைந்தேன்” என்று கூறினார்.