
செல்போன் அழைப்புகளுக்கு பதிலளிக்காததால், முன்னாள் காதலன் மீது பெண் ஒருவர் காரை மோதி கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரைச் சேர்ந்தவர் ஜெய் குமார் பட்டேல். இவருக்கும், ரிங்கு என்ற பெண்ணுக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. ஆனால், சில காரணங்களுக்காக அந்த திருமணம் பாதியில் நின்றது. இதனையடுத்து ரிங்கு, வேறு ஒரு நபரைத் திருமணம் செய்து கொண்டார்.
இருப்பினும், ரிங்கு ஜெய் குமார் பட்டேலுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்துள்ளார். இந்த நிலையில், ரிங்குவின் செல்போன் அழைப்புகளுக்கும் மெசேஜ்களுக்கும் பதிலளிப்பதை ஜெய் குமார் பட்டேல் நிறுத்திவிட்டதாகக் கூறப்படுகிறது. இதில் கோபமடைந்த ரிங்கு, ஜெய் குமார் பட்டேலை கொலை செய்ய திட்டமிட்டு அவரை பின் தொடர ஆரம்பித்துள்ளார்.
இந்த நிலையில், சம்பவம் நடந்த தினத்தன்று நெடுஞ்சாலையில் ஜெய் குமார் பட்டேல் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை காரில் பின் தொடர்ந்த ரிங்கு, ஜெய் குமார் மீது தனது காரை வைத்து மோதினார். இதில், ஜெய் குமார் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அதன் பின்னர், ரிங்கு ஜெய் குமாரை கத்தியால் குத்திவிட்டு காரில் ஏறி அங்கிருந்து வேகமாக தப்பிச் சென்றார். அதன் பின்னர், ஜெய் குமார் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஜெய் குமாரை கத்தியால் குத்தி கொலை முயற்சியில் ஈடுபட்ட ரிங்குவை கைது செய்தனர். ஜெய் குமாரை தனது காரை வைத்து மோதிய சம்பவம் தொடர்பான சிசிடிவி கேமரா காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.