
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த ஓங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார். அவரது தம்பி சுரேஷ்பாபு. இவர்களுக்கு இடையே நிலத்தகராறு இருந்து வந்த நிலையில் நேற்று மாலை இரு குடும்பத்திற்கு இடையே வாய் தகராறும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ராஜ்குமாரின் 14 வயது மகள் பேர்ணாம்பட்டு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். வழக்கம் போல இன்று மாணவி பள்ளிக்குச் செல்லும்போது சித்தப்பா சுரேஷ்பாபு மற்றும் அவரது மனைவி மேகலா இருவரும் அவரை தடுத்து சரமாரியாக தாக்கி சுரேஷ்பாபு கையில் வைத்திருந்த கத்தியால் தலையில் வெட்டி உள்ளார். அலறல் சத்தம் கேட்ட ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் பள்ளி மாணவியை மீட்டு பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
தகவலின் பேரில் வந்த போலீசார் பள்ளி மாணவியிடம் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து சிறுமி கூறியதன் அடிப்படையில் சித்தப்பா சுரேஷ்பாபு கைது செய்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சொத்து தகராறு காரணமாக பள்ளிக்குச் சென்ற அண்ணன் மகளை தடுத்து நிறுத்தி சித்தப்பா கத்தியால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.