Skip to main content

“கடலோர சமூகங்களிடையே பெருத்த அச்சத்தை உருவாக்கியுள்ளது” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 04/03/2025 | Edited on 04/03/2025

 

CM MK Stalin says It has created great fear among coastal communities

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று (04.03.2025) கடிதம் எழுதியுள்ளார். அதில் தமிழ்நாட்டின் கடற்கரையோரத்தில், மன்னார் வளைகுடா கடற்பகுதியில் பாதுகாக்கப்பட்ட சுற்றுச்சூழல் அமைப்புகள் தொடர்ந்து பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்திட, ஒன்றிய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் ஹைட்ரோகார்பன் இயக்குநரகம் வெளியிட்டுள்ள ஏல அறிவிப்பினை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஆழ்துளை எரிவாயுக் கிணறுகள் அமைப்பதற்காக 11.02.2025 அன்று அறிவிக்கப்பட்ட அனைத்து பல்லுயிர் நிறைந்த பகுதிகளையும் திறந்தவெளி பரப்புரிமை கொள்கை (OALP) ஏல அறிவிப்பிலிருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக எழுதியுள்ள கடிதத்தில், “தமிழ்நாட்டின் கடற்கரையோரத்தில், மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ஒன்றிய அரசு மேற்கொண்டிருக்கும் கடல்சார் ஆழ்துளை எரிவாயுக் கிணறுகள் அமைக்கும் நடவடிக்கை ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றிய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் ஹைட்ரோகார்பன் இயக்குநரகம், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு தொகுதிகளை எலம் விடுவதற்கான திறந்தவெளி பரப்புரிமை கொள்கை (Open Acreage Licensing Policy-Bid Round-X) அறிவிப்பினை 11.02.2025 அன்று தொடங்கியிருக்கிறது. அந்த அறிவிப்பில் காவிரிப் படுகையில் 9990.96 சதுர கி.மீ. பரப்பளவும் அடங்கும். இது மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பகத்திற்குள்ளும், பாக் விரிகுடா மற்றும் வாட்ஜ் கரைக்கு அருகில் உள்ளது.

மன்னார் வளைகுடா கடல் தேசியப் பூங்காவை உள்ளடக்கிய மன்னார் வளைகுடா கடற்பகுதி, உயிர்க்கோளக் காப்பகமாக ஒன்றிய அரசால் 18.02.1989 அன்று அறிவிக்கப்பட்டது. இது பவளப்பாறைகள். கடல் புல் படுகைகள், சதுப்பு நிலங்கள்,கழிமுகங்கள், சேற்றுப் படுகைகள், தீவுகள் மற்றும் காடுகள் போன்ற பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளை உள்ளடக்கிய வளமான பல்லுயிர் பெருக்கத்தைக் கொண்டுள்ளது. இந்த உயிர்க்கோளக் காப்பகம், இராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களின் கடற்கரையிலிருந்து 560 சதுர கி.மீ பரப்பளவில், பரந்து விரிந்து கிடக்கும் 21 தீவுகள் மற்றும் அருகிலுள்ள பவளப்பாறைகளின் சங்கிலியைக் கொண்டுள்ளது. இது பல்வேறு வகையான கடல் விலங்கினங்களின் புகலிடமாக விளங்கி வருகிறது. தமிழ்நாடு அரசு செப்டம்பர் 2021இல் பாக் விரிகுடாவில் மிக அரிதான கடற்பசு (Dugong) இனத்தைப் பாதுகாக்கும் வகையில், இந்தியாவின் முதல் கடற்பசு பாதுகாப்பகத்தை அறிவித்துள்ளது. இது தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களின் கடலோரப் பகுதியில் 448 சதுர கி.மீ பரப்பளவை உள்ளடக்கியது ஆகும்.

இந்தப் பகுதியில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுவிற்கான ஆழ்துளை எரிவாயுக் கிணறுகள், இந்தப் பகுதிகளில் எளிதில் பாதிக்கப்படக்கூடிய சுற்றுச்சூழல் அமைப்பு, அவற்றின் வளமான பல்லுயிர் பெருக்கம் மற்றும் கடல்வாழ் உயிரினங்களுக்கு பெருத்த சேதத்தை ஏற்படுத்தக்கூடும். அதோடு கடலின் ஒட்டுமொத்த பாதுகாப்பினையும் சீர்குலைக்கக்கூடும். வண்டல் படிவுகள், நச்சுக் கழிவுகள் வெளியேற்றம் மற்றும் கடல்வாழ் உயிரினங்களின் அழிவு போன்ற அபாயங்கள் மட்டுமின்றி, மன்னார் வளைகுடாவை தங்கள் வாழ்வாதாரத்திற்காக நம்பியுள்ள இலட்சக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும். ஒன்றிய அரசின் ஆழ்துளை எரிவாயுக் கிணறுகள் அமைக்கும் நடவடிக்கைகளால் ஏற்படும் இதுபோன்ற எந்தவொரு இடையூறும், முழு கடலோரப் பகுதியையும் பாதிக்கப்படையச் செய்யும். இது கடலோர சமூகங்களிடையே பெருத்த அச்சத்தை உருவாக்கியுள்ளது.

CM MK Stalin says It has created great fear among coastal communities

தூதிர்ஷ்டவசமாக, இந்த ஏல அறிவிப்புக்கு முன்பாக ஒன்றிய அரசு தமிழ்நாடு அரசிடம் கருத்து எதையும் கேட்கவில்லை. உரிய ஆலோசனை கேட்கப்பட்டிருந்தால், மேலே குறிப்பிட்டுள்ள அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும் தமிழ்நாடு அரசின் சார்பில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டிருக்கும். எனவே, இந்தச் சூழ்நிலையில் ஒன்றிய அரசின் இந்த ஆழ்துளை எரிவாயுக் கிணறுகள் அமைப்பதற்கான ஏல முடிவினை மறுபரிசீலனை செய்யுமாறும், ஆழ்துளை எரிவாயுக் கிணறுகள் அமைப்பதற்காக அறிவிக்கப்பட்ட அனைத்து பல்லுயிர் நிறைந்த பகுதிகளையும் OALP-இலிருந்து நீக்குமாறும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். எளிதில் பாதிக்கப்படக்கூடிய, பாதுகாக்கப்பட்ட இந்தச் சுற்றுச்சூழல் அமைப்புகளின் எதிர்காலம் ஆபத்தில் இருப்பதைக் கருத்தில் கொண்டு, இந்த முக்கியமான பிரச்சினையில் பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்”எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்