கடந்த 2020ஆம் ஆண்டில் இருந்து நாடு முழுவதும் உள்ள கல்வி நிலையங்களில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இந்த திட்டத்துக்கு தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், 10 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் சிபிஎஸ்சி மாணவர்களுக்கு, ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘வரும் 2025 - 2026ஆம் கல்வியாண்டுகளில், சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் கீழ் 10 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத் தேர்வுகள் நடத்தப்படும். மாணவர்களின் மன அழுத்தத்தை குறைப்பதற்காகவும், தேர்வில் நல்ல மதிப்பெண் பெறுவதற்காகவும் தேசியக் கல்வி கொள்கையின் கீழ் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2023ஆம் ஆண்டு, சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் கீழ் 10 மற்றும் 12 படிக்கும் படிக்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும் என மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்த தேர்வை மாணவர்கள் விருப்பப்படி ஒரு முறை அல்லது இரண்டு முறையும் தேர்வை எழுதிக்கொள்ளலாம் எனவும் தெரிவித்திருந்தது. மாணவர்களின் செயல் திறன் எந்த தேர்வில் சிறப்பாக உள்ளதோ அதன் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.