வாட்ஸ் அப் நிறுவனமானது தங்களது புதிய கொள்கைகளை பயனாளர்கள் ஏற்றுக் கொள்ள வைக்க தந்திரமான வேலைகளில் ஈடுபடுவதாக மத்திய அரசு டெல்லி உயர் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
வாட்ஸ்அப் நிறுவனத்தின் புதிய கொள்கைகள் தொடர்பான வழக்கின் விசாரணை டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில் வாட்ஸ்அப் நிறுவனத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப் பட்டுள்ளது.
'வாட்ஸ் அப் நிறுவனம் புதிய உத்திகள் மூலமாக தங்களது கொள்கைகளை பயனாளர்கள் ஏற்கும்படி கட்டாயப்படுத்தும் வகையில் தினந்தோறும் பயனாளர்களுக்கு செயலியில் அறிவிப்பை அறிவித்து வருகிறது. இந்த உத்திகள் மூலம் தனது கொள்கைகளை ஏற்றுக்கொள்ளுமாறு வாட்ஸ்அப் நிறுவனம் கட்டாயப்படுத்தி வருகிறது. இதனை தடுக்க உரிய உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும்' என அந்த பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டு தெரிவித்துள்ளது.
மேலும், அரசு கொண்டுவந்திருக்கும் தனிநபர் தகவல் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்துவதற்கு முன்னதாகவே வாடிக்கையாளர்கள் தங்கள் கொள்கைகளை ஏற்கச் செய்யும் வகையில் செயல்படுகிறது எனவும் மத்திய அரசு 'வாட்ஸ் அப்' மீது குற்றம் சாட்டியுள்ளது தெரிவித்துள்ளது.