இந்தியா முழுவதும் வெங்காயத்தின் விலை தினசரி உயர்ந்துகொண்டே இருக்கிறது. பல மாநிலங்களில் வெங்காயத்தை குறைந்த விலைக்கு விற்பனை செய்ய அரசாங்களே நடவடிக்கை எடுத்து, மக்களிடம் விற்பனை செய்து வருகிறது.

இந்நிலையில், உத்திரப் பிரதேசத்திலுள்ள பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் வெங்காயத்தை வாங்கும் அளவிற்கு வசதியில்லாதவர்களிடம் ஆதார் கார்டை வாங்கி வைத்துக்கொண்டு கடனாக வெங்காயத்தை விற்று வரும் அவலம் நடந்து வருகிறது. காசு வந்தவுடன் அதை வெங்காயக் கடைக்காரர்களுக்கு செலுத்திவிட்டு, ஆதார் கார்டை திரும்பி பெற்றுக்கொள்ளலாம் என்ற அடிப்படையில் கடன் வழங்கி வருகின்றனர். இதுபோல சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த வெங்காய வியாபாரிகள் செய்து வருகின்றனர்.
இதுகுறித்து பேசுகையில், “நாங்கள் கடுமையான வெங்காய விலை உயர்வுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறோம். எங்கள் எதிர்ப்பை பதிவு செய்வதற்காகவே ஆதார் அட்டையைப் பெற்றுக்கொண்டு, அதற்கு பதிலாக வெங்காயத்தைக் கொடுக்கிறோம். ஆதார் அட்டை மட்டுமல்லாமல், வெள்ளி நகைகளையும் அடமானமாக வைத்துக்கொண்டு வெங்காயத்தை விற்பனை செய்துவருகின்றோம். சில கடைகளைல் வெங்காயங்கள் லாக்கர்களில் வைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.