டிராக்டரை திருடியதாகக் கூறி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம், பாட்னாவில் யோகியா கிராமத்தில் இருந்த டிராக்டரை ஒன்றை, ஷம்பு சாஹ்னி என்ற இளைஞரும் மற்றும் அவரது மூன்று நண்பர்களும் திருட வந்ததாகக் கூறப்படுகிறது. டிராக்டரின் சத்தத்தை கேட்ட வண்டியின் உரிமையாளர் அங்கு வந்ததும், ஷம்பு சாஹ்னி கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இதனையடுத்து அந்த உரிமையாளர், தப்பிச் சென்ற ஷம்புவை மட்டும் துரத்தி பிடித்தார். அதன் பிறகு ஷம்புவை, உரிமையாளரும் அவரது கூட்டாளிகளும் கயிற்றால் கட்டி ஒருநாள் இரவு முழுவதும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த ஷம்பு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கையை கயிற்றால் கட்டப்பட்டு உயிரிழந்து கிடந்த ஷம்புவின் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், டிராக்டர் உரிமையாளர் கங்கா சாஹ்னி மற்றும் அவரது மருமகன் புகார் சாஹ்னி ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.