மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்பு இருப்பதாகவும் சாதி கலவரத்தில் தொடர்புள்ளதாகவும் கைது செய்யப்பட்ட ஐந்து இடது சாரி செயல்பாட்டாளர்கள் செப்டம்பர் 5ஆம் தேதி வரை வீட்டுக் காவலில் வைக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் மஹாராஸ்ட்ரா அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜனவரி 1ஆம் தேதி புனேயின் பீமா கோரிகான் பகுதியில் நடந்த கலவரத்தில் தொடர்பு இருப்பதாகவும் மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்பு இருப்பதாகவும் குற்றம் சாட்டி சமூக ஆர்வலர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், இடது சாரித் தலைவர்கள் எனப் பலரின் வீடுகளில் புனே போலீஸார் நேற்று திடீர் ரெய்டு நடத்தினார்கள். கோவா, ஹரியாணா, தெலங்கானா, மும்பை, டெல்லி என 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் உள்ள நகரங்களில் ரெய்டு நடத்தப்பட்டது.
இதில் வரலாற்று ஆய்வாளர் ரோமிலா தாப்பர், சமூக ஆர்வலர் வெர்நான் கோன்சால்வேஸ், அருண் பெரேரியா, கவுதம் நவ்லகா, தொழிலாளர் கூட்டமைப்பு தலைவர் சுதா பரத்வாஜ், தெலுங்கு கவிஞர் வரவரா ராவ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்தக் கைதை எதிர்த்து ரோமிலா தாப்பர், பிரபாத் பட்நாயக், தேவகி ஜெயின், சதீஸ் தேஷ்பாண்டே, மஜாதருவலா ஆகியோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று வழக்குத் தொடரப்பட்டது. அவசர வழக்காக எடுத்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று மதியம் 3:45 மணிக்கு வழக்கு விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்தது. அதேபோல தொடங்கிய விசாரணையில் வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்வலர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டது தொடர்பாக மராட்டிய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 5 பேர் தொடர்ந்த வழக்கை விசாரணைக்கு ஏற்று செப்டம்பர் 6-ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார். கைதான இடதுசாரி ஆதரவாளர்கள் 5 பேரையும் வீட்டுக்காவலில் வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.