வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி ஒருவருடமாக விவசாயிகள், டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாகவும், புதிய வேளாண் சட்டங்களை முறைப்படி திரும்பப் பெற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நவம்பர் 19ஆம் தேதி அறிவித்தார்.
அதனைத்தொடர்ந்து, அண்மையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தநிலையில், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதற்கான மசோதா இன்று (29.11.2021) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது.
இதனையொட்டி மதுரை எம்.பி. சு. வெங்கடேசன், வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படும் இந்தநாள் திருநாள் என கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "விடுதலை இந்தியாவில் எந்த ஒரு பிரதமருக்கும் மார்பளவு பெருமையோடு சொல்லப்பட்டதில்லை. எவ்வளவு விரிந்த மார்பு என்பதில் இல்லை ஒரு அரசின் பலம். விரிந்து பரந்த இதயமே அரசின் தேவை என்பதை விவசாயிகள் சொல்லிக்கொடுத்துள்ளனர். கலப்பைகள் கார்ப்பரேட்டுகளை உழுது அகற்றிய திருநாள் இன்று" என கூறியுள்ளார்.