இந்தியாவில் கரோனா பாதிப்பு மோசமடைந்துள்ளது. தினசரி கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மோசமடைந்து வருகிறது. டெல்லியில் கடுமையான ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆக்சிஜன் தட்டுப்பாட்டை சமாளிக்க, டெல்லி உயர் நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டு உத்தரவு பிறப்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில், டெல்லியில் உள்ள நியூசிலாந்து தூதரகம், ஆக்சிஜன் சிலிண்டர் வேண்டுமென்று காங்கிரஸிடம் உதவி கேட்டுள்ளது. இதுதொடர்பாக நியூசிலாந்து தூதரகம் வெளியிட்டுள்ள ட்வீட்டில், காங்கிரஸ் இளைஞர் அணி தேசிய தலைவரிடம், "நியூசிலாந்து தூதரகத்திற்கு அவசரமாக ஆக்சிஜன் சிலிண்டர் அளித்து உதவ முடியுமா?" என கேட்டுள்ளது.
இந்தியாவிற்கான வெளிநாட்டு தூதரகம், மத்திய அரசை விடுத்து, ஆக்சிஜன் சிலிண்டர் வேண்டுமென எதிர்க்கட்சியிடம் உதவி கேட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் இளைஞர் அணி தேசிய தலைவர் ஸ்ரீனிவாஸும், அவரது தலைமையிலான இளைஞர் அணியும் டெல்லியில் ஆக்சிஜன் தொடர்பான உதவிகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.