மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் வீட்டில் உள்ள கணினியில் இருந்த முக்கிய ஆவணங்கள் சிலவற்றை திருடியதாக அவரது வீட்டு வேலைக்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மும்பையின் நேபியன் கடற்கரை சாலையில் உள்ள பியூஸ் கோயலின் வீட்டில், டெல்லியை சேர்ந்த விஷ்ணுகுமார் (28) என்பவர் வேலைக்காரராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த மாதம் 19-ம் தேதி பியூஸ் கோயலின் மனைவி வெளியூர் சென்று விட்டு வீடு திரும்பியபோது, வீட்டில் இருந்த சில விலையுர்ந்த பொருட்கள் திருடு போயுள்ளதை கண்டறிந்துள்ளார். இதுகுறித்து பியூஷ் கோயல் மனைவி அளித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையின் போது, பியூஷ் கோயல் வீட்டில் இருந்த கணினியில் இருந்து முக்கிய ஆவணங்கள் மற்றும் ரகசிய தகவல்களை திருடப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. திருடப்பட்ட அந்த தகவல்கள் அடையாளம் தெரியாத நபர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதும் உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில், வீட்டில் பணியாற்றி வந்த விஷ்ணுகுமார் இந்த திருட்டை செய்திருப்பதாக தெரிய வந்தது.
இதனையடுத்து, டெல்லியில் விஷ்ணுகுமாரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து திருடப்பட்ட சில பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், திருடப்பட்ட தகவல்கள் யாருக்கு அனுப்பப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மத்திய அமைச்சர் ஒருவர் வீட்டிலிருந்து முக்கிய தகவல்கள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.