உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல், நாளை முதல் மார்ச் 7 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதனையொட்டி பெண்களுக்கும், இளைஞர்களுக்கும் தனித்தனியாக தேர்தல் அறிக்கை வெளியிட்ட காங்கிரஸ், இன்று மூன்றாவது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிடப்பட்ட அந்த தேர்தல் அறிக்கையில், 10 நாட்களில் விவசாய கடன் தள்ளுபடி உட்பட பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கிய வாக்குறுதிகள்;
ஆட்சிக்கு வந்த 10 நாட்களில் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும்.
மின்சாரக் கட்டணம் பாதியாகக் குறைக்கப்படும். கரோனா காலகட்டத்தின் மின்சார கட்டண பாக்கிகள் தள்ளுபடி செய்யப்படும்.
கரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.25,000 வழங்கப்படும்
பொதுத்துறையில் 20 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். 12 லட்சம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும், 8 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்
10 லட்சம் வரை அனைவருக்கும் இலவச சிகிச்சை அளிக்கப்படும்.
கரோனா பரவலின்போது உயிரிழந்த முன்களப்பணியாளர்களின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்,
பட்டியலின, பழங்குடியின மாணவர்களுக்கு முதுகலை வரை இலவச கல்வி வழங்கப்படும். இவ்வாறு காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.