தங்களின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காகச் சிறையில் இருந்துகொண்டு லாலு பிரசாத் யாதவ் சதி செய்வதாக பீகார் மாநில பாஜக மூத்த தலைவர் சுஷில் மோடி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாகச் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ.க. கூட்டணியை எதிர்த்து காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலில் போட்டியிட்டன. இந்தியாவே பெரிதும் ஆவலாக எதிர்பார்த்த, இந்த தேர்தல் முடிவுகள் அண்மையில் வெளியானது. இதில், 125 இடங்களில் பா.ஜ.க கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இதனைத் தொடர்ந்து, பீகார் மாநிலத்தின் முதல்வராக ஏழாவது முறையாகப் பதவியேற்றார் நிதிஷ்குமார். இந்நிலையில், தங்களின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக சிறையில் இருந்துகொண்டு லாலு பிரசாத் யாதவ் சதி செய்வதாகப் பீகார் மாநில பாஜக மூத்த தலைவர் சுஷில் மோடி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
நிதிஷ்குமாரின் கடந்த ஆட்சியில் துணை முதல்வராக இருந்த பாஜகவின் சுஷில் மோடிக்கு, இம்முறை அந்த பதவி வழங்கப்படாததால் அவர் அதிருப்தியில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்த சூழலில், புதிய அரசு ஆட்சிப் பொறுப்பேற்று 10 நாட்களே ஆன நிலையில், இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள சுஷில் மோடி, "மாட்டுத் தீவன மோசடி வழக்குகளில் சிறைதண்டனை பெற்றுவரும் லாலு பிரசாத் யாதவ் சிறையிலிருந்தபடியே செல்போன் மூலம் சட்டமன்ற உறுப்பினர்களை அணுகி வருகிறார். அவர் தேசிய ஜனநாயக கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க முயன்று வருகிறார். ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைமையிலான மெகா கூட்டணியை ஆட்சி அதிகாரத்தில் அமரவைப்பதற்காக நிதிஷ் ஆட்சியைக் கவிழ்க்கும் சதித்திட்டத்தைச் சிறையிலிருந்தபடியே செய்து வருகிறார் லாலு பிரசாத் யாதவ்" எனத் தெரிவித்துள்ளார்.